“அம்பயர்களின் Wicket விவரங்கள் திரையில் காட்டப்பட வேண்டும்”- நடுவர்களின் முடிவில் வார்னர் அதிருப்தி

வீரர்கள் களமிறங்கும் போது எப்படி புள்ளிவிவரங்கள் காட்டப்படுகிறதோ அப்படியே அம்பயர்கள் களமிறங்கும் போதும் இதற்கு முன் எடுத்த சரியான மற்றும் தவறான முடிவுகளின் விவரங்களும் திரையில் காட்டப்பட வேண்டும் என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
David Warner
David WarnerTwitter

டேவிட் வார்னர் இந்த உலகக்கோப்பையில் நடுவர்களின் முடிவுகள் மேல் பெரிய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். முதலிரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராகவும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. முதல் போட்டியில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி, இரண்டாவது போட்டியில் 177 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

David Warner
5 முறை சாம்பியனான அணிக்கு என்னாச்சு? மீண்டு எழுமா?

இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான 3வது போட்டியிலும் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா, ஒரு தோல்வி பயத்திற்கு சென்று தட்டுத்தடுமாறி பின்னர் முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவுசெய்தது. அந்த போட்டியில் வார்னருக்கு அளிக்கப்பட்ட விக்கெட்டுக்கு திருப்தியடையாத அவர், தன்னுடைய பேட்டை காலில் அடித்து கத்திக்கொண்டே வெளியேறினார்.

சர்ச்சைக்குரிய முடிவுகளை பெற்ற ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது உலகக்கோப்பை போட்டியில், 312 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை விரைவாகவே இழந்து தடுமாறியது. அப்போது இன்னிங்ஸை கட்டமைக்கும் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் விளையாடினர். முக்கியமான தருணத்தில் LBW விக்கெட் முடிவின் மூலம் நட்சத்திர வீரர் ஸ்மித் அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்யும் எனும் திடமான நம்பிக்கையில் அந்த முடிவை எதிர்த்து 3வது நடுவருக்கு சென்றார் ஸ்மித். ஏனென்றால் அவர் எதிர்கொண்ட பந்தை ஜம்ப் செய்தபடிதான் விளையாடினார் ஸ்மித். எப்படியும் நாட் அவுட்தான் வரும் என நினைத்து நம்பிக்கையுடன் இருந்த அவருக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சோக முகத்தோடு வெளியேறினார் ஸ்டீவன் ஸ்மித்.

அதே போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர் ஸ்டோய்னிஸ் விக்கெட்டும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்தது. அவருடைய கை கிளவ்ஸில் பட்டுச்சென்ற பந்தை விக்கெட் கீப்பர் டி-காக் தாவி பிடித்து கேட்ச்சை எடுத்தார். ஆனால் அவுட்டா? நாட்-அவுட்டா? என ஒரு சர்ச்சைக்குரிய விக்கெட்டாக மாறிய ஸ்டோய்னிஸ் அவுட், 3வது நடுவரையும் குழப்பத்தில் தள்ளியது.

அவருடைய கிளவ்ஸில் பந்துபடும் போது, பேட் பிடித்திருக்கும் கை, பந்து பட்டுச்சென்ற கையோடு தொடர்பில் இல்லாமல் இருந்தது. கிரிக்கெட் விதிமுறையின்படி, பந்து கையில் படும்போது, அக்கையுடன் பேட் தொடர்பில்லாமல் இருந்தால் அது நாட் அவுட்டாகதான் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் காட்சிகளில் தெளிவில்லாத நிலையில் குழப்பமடைந்த 3வது நடுவர் ஸ்டோய்னிஸுக்கு அவுட் என முடிவை அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிரான 3வது போட்டியிலும் ஒரு விக்கெட் சர்ச்சைக்குரிய விதமாக இருந்தது. சிறப்பாக பந்துவீசிய மதுஷங்கா ஒரே ஓவரில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றி அசத்தியிருந்தார். டேவிட் வார்னருக்கு அளிக்கப்பட்ட LBW முடிவில் பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்வதாக நினைத்த அவர், 3வது நடுவரிடம் சென்றார். ஆனால் பந்தானது ஸ்டம்ப்பை தாக்குவது போல் காண்பிக்கப்பட்டது. அந்த விக்கெட்டை ஏற்றுக்கொள்ள முடியாத வார்னர், கள நடுவரை நோக்கி கத்திக்கொண்டே பேட்டை அடித்துக்கொண்டே வெளியேறினார். அப்போது களநடுவராக இருந்தது ஜோயல் வில்சன்.

அம்பயர்களின் புள்ளிவிவரங்கள் திரையிடப்பட வேண்டும்! - வார்னர்

ஆஸ்திரேலியா இலங்கை போட்டி முடிந்து 2 நாட்கள் ஆனாலும், அம்பயரின் முடிவுகள் மீது திருப்தியடையாத வார்னர், களநடுவர்களின் புள்ளிவிவரங்கள் திரையிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”பேட்டிங் செய்ய வீரர்கள் களமிறங்கும்போது அவர்களின் புள்ளிவிவரங்கள் திரையில் காட்டப்படும். அதே போன்று நடுவர்களை அறிவித்ததும் அவர்கள் திரையில் வருவார்கள். ஆனால் அவர்களின் புள்ளிவிவரங்கள் இடம்பெறாது. நான் அவர்களின் புள்ளிவிவரங்களும் திரையில் வருவதைப் பார்க்க விரும்புகிறேன்.

David Warner
David Warner

ஒரு நடுவர் எந்தளவு சரியான முடிவுகளையும், தவறான முடிவுகளையும் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படுவது சரியான ஒரு மாற்றமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் தேசிய ரக்பி லீக்கில் (NRL) இதை நாம் பார்க்கிறோம். இது ஒரு உலக விளையாட்டு என்று எனக்குத் தெரியும், இருந்தாலும் NRL மற்றும் NFL அந்த புள்ளிவிவரங்களைக் காட்டுகிறது. பார்வையாளர்களும் அம்பயர்களின் விவரங்களை பார்ப்பது ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

David Warner
David Warner

மேலும் “அம்பயர்களின் இத்தகைய முடிவுகளின் தாக்கமானது வீரர்கள் அணியில் இருக்க வேண்டுமா இல்லையா என்ற நிலைக்கு செல்வதை உருவாக்குகின்றது. நீங்கள் என்னதான் பெரிய வீரர்களாக இருந்தாலும், முடிவில் நீங்கள் உங்கள் போர்டில் என்ன ரன்கள் சேர்த்துள்ளீர்கள் என்றுதான் எல்லோராலும் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விஷயங்கள் எளிதானதல்ல என்று நினைக்கிறேன். ஆனாலும் இது நிச்சயம் ஆராயப்பட வேண்டிய ஒன்று" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com