”உங்களுக்கு பெர்த்தில் நல்ல நேரம்;ஆனால்..”-ஆஸ்திரேலியா பிரதமர் கருத்துக்கு கோலியின் பதிலை பாருங்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. WTC பாய்ண்ட்ஸ் பட்டியலில் இந்தியா முதலிடத்தில், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவானது இரண்டு அணியில் ஒன்றை WTC தொடரிலிருந்து வெளியேற்றும்.
இத்தகைய சூழலில் எந்த அணி யாருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்ற பரபரப்பான சூழலில் நடைபெற்ற முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து சம்பவம் செய்த இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்திலான மாபெரும் வெற்றியை பதிவுசெய்தது.
இந்த வெற்றியில் பும்ராவின் 8 விக்கெட்டுகள், ஜெய்ஸ்வாலின் 161 ரன்கள் மற்றும் விராட் கோலியின் சதம் மூன்றும் பெரிய பங்கை வகித்தன.
இந்நிலையில், டிசம்பர் 6-ம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பிரதமர் 11 அணி மற்றும் இந்திய ஏ அணிக்கு இடையே பிங்க் பால் கொண்ட பயிற்சி ஆட்டம் நடக்கவிருக்கிறது.
ஆஸ்திரேலியா பிரதமருக்கு விராட் கோலி அளித்த பதில்..
ஆஸ்திரேலியாவின் பிரதமர் 11 அணி மற்றும் இந்திய ஏ அணிக்கு இடையேயான இரண்டு நாட்கள் கொண்ட பிங்க் பால் பயிற்சி ஆட்டமானது நவம்பர் 30ம் தேதி கான்பெராவில் நடக்கவிருக்கிறது.
அதற்கு முன்னதாக கான்பெராவில் உள்ள பார்லிமெண்ட் மாளிகையில் இந்திய அணியை ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சந்தித்தார். சிரித்த முகத்துடன் இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சக கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது விராட் கோலியுடன் சில வார்த்தைகளை ஆஸ்திரேலியா பிரதமர் பகிர்ந்து கொண்டபோது, அதற்கு கோலி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாக பரவிவரும் வீடியோவில், விராட் கோலியிடம் “பெர்த் மைதானத்தில் உங்களுக்கு நல்ல நேரம். பிளெடி ஹெல் (ஏமாற்றத்தை வெளிப்படுத்தி), ஆனாலும் எங்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை” என அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆஸ்திரேலியா செயல்படும் என்ற விதத்தில் பேசினார்.
அதற்கு பதிலளித்த விராட் கோலி, “அப்படியானால் நீங்கள் அதில் சில காரசாரமான விஷயங்களை சேர்க்கவேண்டும்” என கூறினார். அதற்கு பதிலளித்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ”இந்தியாவிற்கு அது நன்றாக தெரியும்” என்று சிரித்தபடி பேசிவிட்டு நகர்ந்தார்.
விராட் கோலியின் இந்த பதிலை இந்திய ரசிகர்கள் பாராட்டி அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவுடனான ஆஸ்திரேலியா PM 11-ன் பயிற்சி போட்டி குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அந்தோணி அல்பானீஸ், “இந்திய அணிக்கு எதிராக மனுகா ஓவலில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் PM’s XI க்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
ஆனால் நான் பிரதமரிடம் (நரேந்திர மோடி) சொன்னதை போல, நான் சிறப்பாக செயல்பட ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவளிக்கிறேன்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.