ODI கிரிக்கெட்டின் ராஜா.. புதிய உலக சாதனை படைத்த கோலி! 14,000 ரன்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்றுவடிவிலான கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், அதிவேகமாக 12,000 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் முதல்வீரராக 4000 ரன்கள் என பல்வேறு உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் மேலும் ஒரு உலக சாதனையை பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் படைத்துள்ளார் கிங் கோலி. பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்களை அடித்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
அதிவேகமாக 14,000 ரன்கள்..
ODI கிரிக்கெட்டில் 14,000 ரன்களை எட்டிய இரண்டு வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா இருவரும் இருந்தாலும், 300 இன்னிங்ஸுக்கு குறைவாக விளையாடி இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.
சச்சின் மற்றும் சங்ககரா இருவரும் 350 மற்றும் 378 இன்னிங்ஸில் 14000 ரன்களை கடந்த நிலையில், 287 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி இந்த இமாலய சாதனையை தன்பெயரில் எழுதியுள்ளார் கிங்.
அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கை கடந்து தன்னுடைய அபாரமான ஃபீல்டிங்கிலும் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார் விராட் கோலி.
ஃபீல்டராக வரலாற்று சாதனை..
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இரண்டு கேட்ச்களை பிடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபீல்டராக அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரராக மாறி மற்றொரு சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் 156 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி 158 கேட்ச்களை பிடித்து சாதித்துள்ளார் கோலி.
அதுமட்டுமில்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக இலங்கையின் ஜெயவர்த்தனே மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கிற்கு பிறகு மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார் கிங் கோலி. இந்தப் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ள இன்னும் 3 கேட்ச்களே விராட் கோலிக்கு தேவையாக உள்ளது.