பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் ஒலித்த இந்திய தேசிய கீதம்.. விதியை மீறிய ஐசிசி..? PAK குற்றச்சாட்டு!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான சர்ச்சை மோதல் என்பது அதிகரித்துக்கொண்டே இருந்தது.
முதலில் தொடர் நடைபெறும் நாடான பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. அதனை ஏற்காத பாகிஸ்தான் நிர்வாகம் இந்தியாவின் ஹைப்ரிட் மாடல் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது. பின்னர் ஐசிசி வற்புறுத்தலின் பேரில் 2027 வரை பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வந்து விளையாடாது என்ற நிபந்தனையுடன், இந்தியாவின் போட்டிகளை துபாயில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா மற்றும் ஃபோட்டோஷூட்டுக்கு அனைத்து நாடுகளின் கேப்டன்களும் பங்கேற்கும் நிலையில், ரோகித் சர்மாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்திய கேப்டனை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது.
பின்னர் இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை இந்தியா பெயரிடாது என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. ஆனால் ஐசிசி விதிமுறையின் படியே பிசிசிஐ செல்லும் என அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லாததால், இந்தியாவின் கொடியை பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் ஏற்றவில்லை என்ற வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்தது. ஆனால் தொடக்க போட்டியின் போது கராச்சியில் இந்தியகொடி ஏற்றப்பட்டு, எழுந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பாகிஸ்தானில் ஒலித்த இந்தியதேசிய கீதம்..
இப்படி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதிலிருந்தே இந்தியா-பாகிஸ்தான் என்ற பெயர்கள் ஏதோவொரு விசயத்தில் அடிபட்டுக்கொண்டே இருந்த நேரத்தில், லாகூரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போட்டியின் போது ‘சில நொடி இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது’ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை முகம் சுளிக்க வைத்துள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தேசிய கீதம் பாடுவதற்கு காத்திருந்தபோது, இங்கிலாந்து தேசிய கீதத்திற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் தவறுதலாக ஒலிக்கப்பட்டது மைதானத்தில் இருந்தவர்களை குழப்பமடைய செய்தது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் அணிகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு ICC-யின் உறுப்பினர்களே பொறுப்பு என்பதால், இந்தவிவகாரம் குறித்து ஐசிசி முறையான விளக்கம் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கே வராத ஒருநாட்டின் தேசிய கீதம் எப்படி Playlist-ல் இருந்து தவறுதலாக இசைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் வாரியம் ஐசிசி மீது வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் நேரலை ஒளிபரப்பின் போது, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையுடன் பாகிஸ்தான் பெயர் இடம்பெறவில்லை என்பதும் ஐசிசி மீது குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள ஐசிசி, அனைத்து போட்டிகளுக்கும் ஒரே கிராஃபிக்ஸை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ஐசிசி தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாக சில பிசிசிஐ அதிகாரிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.