பாகிஸ்தான் | கால்பந்து போட்டியில் வெடித்த வன்முறை.. வீரர்கள், அதிகாரிகள் காயம்.. ராணுவ அணி காரணமா?
பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற தேசிய கால்பந்து அரையிறுதிப் போட்டியின்போது ஏற்பட்ட வன்முறையில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி கேபிடி விளையாட்டு வளாகத்தில் அந்நாட்டு ராணுவத்திற்கும் வாப்டா அணிக்கும் இடையே தேசிய கால்பந்து அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் வாப்டா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அவ்வணி வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், அவர்களுடைய வெற்றியைப் பிடிக்காத இராணுவ அணி வீரர்கள் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது, மோதலாக மாறி, பின்னர் வன்முறையில் முடிந்தது. இந்த சம்பவத்தால் இருதரப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காயமடைந்தனர்.
முன்னதாக, போட்டியின்போது நடுவர் ஒருவர், ராணுவ அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்த வாப்டா அணியினர் அப்போதே முதலே மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்துள்ளனர். இறுதியில் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர், இவ்விவகாரம் பூதாகரமாய் மாறியுள்ளது. இதையடுத்தே தாக்குதலும் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த நடுவர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் நாட்டின் தேசிய ஒலிம்பிக் அமைப்பு முறையான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ”சண்டையைத் தூண்டிவிட்ட அல்லது தொடங்குவதில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

