கராச்சி ஸ்டேடியம் | மற்றநாட்டு கொடிகளுக்கு இடம்.. இந்தியக் கொடி நீக்கம்..? வைரலாகும் வீடியோ!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான சர்ச்சை மோதல் என்பது அதிகரித்துக்கொண்டே இருந்தது.
பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு - முதலில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது.
ஹைப்ரிட் மாடலுக்கு நிபந்தனை விதித்த பாகிஸ்தான் - இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்ற முடிவில் திடமாக இருந்ததால், பாகிஸ்தான் 2027 வரை இந்தியாவில் நடக்கும் போட்டியில் விளையாடாது என்ற நிபந்தனையுடன் ஹைப்ரிட் மாடலுக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவிருக்கிறது.
தொடக்க விழாவில் பங்கேற்காத ரோகித் - சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா மற்றும் ஃபோட்டோஷூட்டுக்கு அனைத்து கேப்டன்களும் பங்கேற்கும் நிலையில், ரோகித் சர்மாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கேப்டனை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது.
இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இல்லை - இந்த விவகாரம் தொடர்ந்து இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு பிசிசிஐ மீது வைக்கப்பட்டது. ஆனால் ஐசிசி விதிமுறைபடியே ஜெர்சி இருக்கும் என பிசிசிஐ குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த சூழலில் தற்போது வைரலாகியுள்ள வீடியோ ஒன்றில் ஐசிசி தொடர் நடத்தும் மைதானங்களில் விளையாடும் அனைத்து நாடுகளின் தேசியக்கொடி இடம்பெறும் நிலையில், இந்திய கொடி மட்டும் இடம்பெறவில்லை என்ற பதிவு வைரலாகி வருகிறது.
இந்திய கொடி நீக்கமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்தியக் கொடி இல்லாததைக் காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், இந்தியாவைத் தவிர, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கொடிகளும் இடம்பெற்றுள்ளன. ஐ.சி.சி நிகழ்வுகளின் போது ஒவ்வொரு மைதானத்திலும் பங்கேற்கும் அணிகளின் அனைத்து கொடிகளும் இருப்பது வழக்கம் என்ற நிலையில், இந்தியக் கொடி இல்லாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என தெரிகிறது.
காரணத்தை வெளிப்படுத்திய பிசிபி அதிகாரிகள்..
இந்த சம்பவம் வைரலானதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், சில பாகிஸ்தான் வாரிய அதிகாரிகள் விளக்கமளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் செய்தியின் படி, கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் விளையாடப்போகும் நாடுகளின் கொடிகள் மட்டுமே ஏற்றப்பட்டுள்ளன என்றும், போட்டி நடைபெறும்போது பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிடத்தேவையில்லை என்று நினைப்பதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தனது மொத்த போட்டிகளையும் துபாயில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.