மீண்டும் மீண்டும் சதமடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி.. முதல் தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
தென்னாப்பிரிக்கா யு19 அணிக்கு எதிரான தனது தலைமையிலான முதல் தொடரையும் முழுவதுமாக வென்ற சூர்யவன்ஷி, மீண்டும் கிரிக்கெட் வல்லுநர்களைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டன் ஆயுஷ் மாத்ரேவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இந்திய அணியை 14 வயது வைபவ் சூர்யவன்ஷி வழிநடத்துகிறார். முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இன்றையப் போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்யப் பணித்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் சூர்யவன்ஷியும், ஆரோன் ஜார்ஜும் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிலும் சூர்யவன்ஷி 74 பந்துகளில் 9 பவுண்டரி, 10 சிக்ஸருடன் 127 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக ஆரோன் ஜார்ஜும் 106 பந்துகளில் 16 பவுண்டரிகள் மூலம் 118 ரன்கள் எடுத்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது. வேதந்த் திரிவேதி (34), முகமது இனான் (28) ஆகியோரின் கடைசிக்கட்ட அதிரடி ரன் குவிப்பால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்தது. பின்னர் கடுமையான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், 35 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், சூர்யவன்ஷி தலைமையிலான புது இளம்படை, தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. தனது தலைமையிலான முதல் தொடரையும் முழுவதுமாக வென்ற சூர்யவன்ஷி, மீண்டும் கிரிக்கெட் வல்லுநர்களைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.
