Shami | டாப் விக்கெட் டேக்கர்... ஆனாலும் அணியில் இடமில்லை... ஷமிக்கு எமனாக நிற்பது எது?

ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பைகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஷமி. அதற்கு அவர் எடுத்துக்கொண்டது மொத்தமே 14 போட்டிகள் தான்.
Mohammed Shami
Mohammed ShamiPTI

நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை வெறும் 55 ரன்களுக்குள் சுருட்டி மிரட்டியிருக்கிறது இந்தியா. ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி அடங்கிய இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட் மிரட்டிக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரும் இவர்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த பௌலிங் யூனிட்களுள் ஒன்றாக கருதப்படுகிறது இந்த பேஸ் கூட்டணி. முந்தைய வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் அட்டாக், 2003 ஆஸ்திரேலிய பௌலிங் அட்டாக் போன்றவற்றோடு கூட ஒப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்திருக்கும் இந்த பௌலிங் யூனிட் எல்லா போட்டிகளிலும் ஒன்றாக விளையாட முடிவதில்லையே!

முகமது ஷமி | முகமது சிராஜ்
முகமது ஷமி | முகமது சிராஜ்-

இலங்கைக்கு எதிரான போட்டியில் பும்ரா, சிராஜ் இருவரும் முதல் ஸ்பெல்லிலேயே இலங்கை அணியின் முதுகெலும்பை உடைத்தனர். 8 ஓவர்களிலிலேயெ 4 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. அப்போது பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பும்ரா, சிராஜ் இருவரையும் பற்றியல்ல. ஷமியைப் பற்றி! 'இந்த ஸ்பெல் முடிந்தால் இலங்கை அணி கொஞ்சம் ஆசுவாசப்படலாம் என்று நினைக்கும். ஆனால் அப்போது ஷமி பந்தோடு வந்து நிற்பார்' என்பது போல் பலரும் காமெடியான ஸ்டேட்டஸ்கள், மீம்கள் பதிவிட்டனர். அந்த அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஷமி. இந்த உலகக் கோப்பையில் அவர் விளையாடிய முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். எதிர்பார்த்ததைப் போலவே இலங்கை அணியின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர், இந்தப் போட்டியிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3 போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பவர், இதுவரை ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பைகளில் 45 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார் அவர். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது மொத்தமே 14 போட்டிகள் தான்.

உலகக் கோப்பைகளில் முகமது ஷமி

Mohammed Shami
Mohammed ShamiManvender Vashist Lav

2015 - 7 போட்டிகளில் 17 விக்கெட்டுகள்
2019 - 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்
2023 - 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்

இப்படி போட்டிக்கு சராசரியாக 3 விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்கும் ஒரு வீரர் ஏன் இந்த உலகக் கோப்பையின் மற்ற 4 போட்டிகளில் விளையாடவில்லை? அதற்கு ஷமி எந்த வகையிலும் காரணம் இல்லை. அதற்குக் காரணம் பந்துவீச்சு கூட இல்லை. பேட்டிங்! ஒரு உலகத்தர பந்துவீச்சாளர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் பேட்டிங். பேட்டிங் டெப்த்!

இந்திய அணியைப் பொறுத்தவரை மற்ற அணிகளில் இருக்கும் ஆல் ரவுண்டர் ஆப்ஷன்கள் இல்லை. ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோரை விட்டால் இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர்களே இல்லை. அதிலும் ஜடேஜா, அக்‌ஷர் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள். அதுபோக, பார்ட் டைமாக பந்துவீசக்கூடிய பேட்ஸ்மேன்களும் இல்லை. இது இந்திய அணிக்குப் பெரும் தலைவலியாக இருந்துவருகிறது. டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாருமே பந்துவீசுவதில்லை என்பதால் ஹர்திக், ஜடேஜா இருவருமே பிளேயிங் லெவனில் ஆடவேண்டியதாக இருக்கிறது. ஏழாவது பேட்ஸ்மேனுக்கான இடத்தில் இருக்கும் ஜடேஜா, அந்த இடத்தை முழுமையாக நியாயப்படுத்துவதில்லை என்பதால் பேட்டிங் டெப்த் தேவைப்படுகிறது. டெய்ல் எண்டர்களும் ஓரளவு பேட்டிங்கில் பங்களிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இங்குதான் ஷமியின் இடத்துக்கு ஆபத்து வருகிறது.

பும்ரா, சிராஜ், ஷமி, குல்தீப் என யாரும் பேட்டிங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்கள் அல்ல என்பதால் இந்திய அணி ஓரளவு பேட்டிங் செய்யக்கூடிய ஷர்துல் தாக்கூரை எட்டாவது இடத்தில் களமிறக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறது. அதனால் ஷமி பிளேயிங் லெவனில் தன் இடத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் தான் இப்போது அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. ஒருவேளை அவர் திரும்பி வந்தால் ஷமி மீண்டும் அணியில் இடத்தை இழக்கலாம்.

இதில் என்ன கொடுமை எனில், இது ஷமிக்கு முதல் முறையாக நடக்கவில்லை. 2019 உலகக் கோப்பையிலும் இதே தான் நடந்தது. அப்போது ஹர்திக்கை முழுமையாக மூன்றாவது ஃபாஸ்ட் பௌலிங் ஆப்ஷனாகப் பயன்படுத்தினார்கள். அதனால் இரண்டு ஸ்பின்னர்கள் பிளேயிங் லெவனில் இருந்தார்கள். குல்தீப், சஹால் இருவருமே ஆடினார்கள். கடைசி கட்டத்தில் சஹாலுக்குப் பதில் ஜடேஜா அணியில் இடம்பிடித்தார். ஒரு ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஜ், மொயின் அலி போன்ற ஸ்பின்னர் டாப் ஆர்டரில் இல்லாத காரணத்தில் இரு முழு நேர ஸ்பின்னர்களை களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இரு முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களுக்கே அணியில் இடம் இருந்தது. பும்ரா நிச்சயம் ஆடவேண்டும். அந்த இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் ஆடினார். அவருக்கு சாதகமாக இருந்த ஒரு அம்சம், அவரால் பேட்டிங் செய்ய முடியும்.

அப்போது இருந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராவது 5-6 ஓவர்கள் வீசக்கூடியவராக இருந்திருந்தால் ஜடேஜாவை நம்பர் 7ல் பயன்படுத்தி, ஷமியையும் அணியில் சேர்த்திருக்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பே அமையவில்லை. இப்போது போல் அப்போதுமே புவி காயமடைந்து ஆடாத நிலையில்தான் ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கூட 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி மிரட்டினார் ஷமி. இருந்தாலும் அரையிறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் காம்பினேஷன்!

Mohammed Shami
INDvsSL: 30 பந்துகளில் 22 Dot Balls, 5 விக்கெட்டுகள்... மீண்டும் முகமது ஷமி மேஜிக்!

இப்படி இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் ஒரு உலகத்தர பௌலரின் இடத்தை இந்திய அணி பலமுறை தியாகம் செய்யவேண்டியிருக்கிறது. 2027 உலகக் கோப்பையிலும் இதுவே தொடரக்கூடும். அதை சரிசெய்ய இந்தியா பேட்டிங் செய்யக்கூடிய பௌலர்களை மட்டும் தேடாமல், பந்துவீசக்கூடிய பேட்ஸ்மேன்களையும், முழுமையான ஆல்ரவுண்டர்களையும் உருவாக்குவது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com