INDvsSL: 30 பந்துகளில் 22 Dot Balls, 5 விக்கெட்டுகள்... மீண்டும் முகமது ஷமி மேஜிக்!

இத்தனை செயல்பாடுகளையும் கடந்து இன்னொரு வீரர் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார் என்றால் அவருடைய செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும்! முகமது ஷமி அப்படியொரு மிரட்டலான செயல்பாட்டை வான்கடேவில் அரங்கேற்றினார்.
Mohammed shami
Mohammed shamipt desk

போட்டி 33: இந்தியா vs இலங்கை

முடிவு: 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (இந்தியா 357/8; இலங்கை 55 ஆல் அவுட், 19.4 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: முகமது ஷமி (இந்தியா)

பௌலிங்: 5-1-18-5

Bumrah
Bumrah

*சுப்மன் கில் 92 ரன்கள் எடுத்து மும்பை ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைத்துவிட்டு சென்றார்.

*ரோஹித் அவுட் ஆனதும் வந்த விராட் கோலியோ தன் டிரேட் மார்க் ஆட்டத்தை ஆடி 88 ரன்கள் விளாசினார்.

*ஷ்ரேயாஸ் ஐயரோ மிரட்டலாக ஆடி 56 பந்துகளில் 82 ரன்கள் விளாசி இந்தியா 350 ரன்களைக் கடக்க காரணமாக அமைந்தார்.

*இலங்கை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அந்த அணியின் சரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டார் ஜஸ்ப்ரித் பும்ரா

* தான் வீசிய முதல் 7 பந்துகளிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியை ஒட்டுமொத்தமாக சாய்த்தார் சிராஜ்.

இத்தனை செயல்பாடுகளையும் கடந்து இன்னொரு வீரர் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார் என்றால் அவருடைய செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும்! முகமது ஷமி அப்படியொரு மிரட்டலான செயல்பாட்டை வான்கடேவில் அரங்கேற்றினார்.

பும்ரா, சிராஜ் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே மொத்தமாக நிலைகுலைந்துவிட்டது இலங்கை. 8 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. அவர்கள் இருவரும் மிரட்டிக்கொண்டிருந்தபோதே பலரும் சமூக வலைதளங்களில் மீம் போட்டுக் கொண்டிருந்தார்கள். 'இவர்கள் பௌலிங்கிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால், அடுத்தது ஷமி வருவாரே' என்று மீம்கள், ஸ்டேட்டஸ்கள் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் நினைத்ததுபோலவே தக தகவேன எரிந்துகொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் ஷமி. இல்லை, பெட்ரோலையே ஊற்றினார்.

முகமது ஷமி
முகமது ஷமி

அவர் வீசிய மூன்றாவது பந்திலேயே அசலன்கா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஹேமந்தா அவுட். முதல் ஓவர் மெய்டன் + இரண்டு விக்கெட்டுகள். இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் துஷமன்தா சமீரா. அந்த ஓவரில் வெறும் ஒரேயொரு ரன். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து இலங்கை டீசன்ட்டான ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல முயன்ற மேத்யூஸை மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் வெளியேற்றினார் ஷமி. தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிக் கொண்டிருந்த அவர், ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் ரஜிதாவை வெளியேற்றி தன் ஐந்தாவது விக்கெட்டை பதிவு செய்தார்.

உலகக் கோப்பை அரங்கில் இது அவருடைய 45வது விக்கெட்டாக அமைந்தது. இதன்மூலம் இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தார் ஷமி.
Mohammed shami
45 உலகக்கோப்பை விக்கெட்டுகள்! ஒரே இந்திய பவுலராக முகமது ஷமி படைத்த 5 வரலாற்று சாதனைகள்!

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

நான் முதலில் அல்லாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நாங்கள் கொட்டிக் கொண்டிருக்கும் கடின உழைப்பு, அதனால் கிடைத்திருக்கும் ஒரு ரிதம், அதனால்தான் களத்தில் இந்த அட்டகாசமான செயல்பாட்டை, இந்த பௌலிங் யூனிட் செய்துகொண்டிருக்கும் அற்புதத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்

நாங்கள் பந்துவீசிக்கொண்டிருக்கும் இந்த விதத்தை யாராலும் நேசிக்காமல் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். நாங்கள் அனுபவித்து விளையாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு அணியாக ஒன்றினைந்து செயல்படுகிறோம். அதன் பலனைத்தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்”

முகமது ஷமி

“உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் டாப் விக்கெட் டேக்கர் ஆகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் என்னுடைய சிறந்த செயல்பாட்டைக் கொடுக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன். எப்போதும் போல் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதிலும், சரியான ரிதமை கண்டறிவதிலும் அதிக கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் இது போன்ற பெரிய தொடர்களில் ரிதமை இழந்துவிட்டால் அதை மீண்டும் பெறுவது மிகவும் கடினம். அதனால் ஆரம்பத்தில் இருந்தே சரியான இடத்தில், சரியான லென்த்தில் பந்தை பிட்ச் செய்யவே முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

அது சரியாக செல்லும்போது, அதை ஏன் தொடரக்கூடாது! ஆம் அது கடினம்தான். ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன். உங்கள் ரிதம் சரியாக இருக்கவேண்டும். நீங்கள் பந்தை பிட்ச் செய்யும் இடம் சரியாக இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக வெள்ளைப் பந்தில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால், பிட்ச் மூவ்மென்ட் கொடுக்கும். அதுதான் மிகவும் முக்கியம். இதுவொன்றும் விஞ்ஞானம் அல்ல. நல்ல ரிதம், நல்ல உணவு, உங்கள் மனதை தெளிவாக வைத்திருத்தால், அதைவிட முக்கியமாக மக்களின் நேசம். இவைதான் முக்கியம். இந்தியாவில் நாங்கள் பெறும் ஆதரவு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது. இந்தியாவுக்கு வெளியே ஆடும்போதும் இந்திய ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெறுகிறோம். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன்”

- முகமது ஷமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com