IND vs AUS டி20| 74 ரன்கள் விளாசிய டிம் டேவிட்.. இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியில் 186 ரன்கள் குவித்தது. இந்தியா 187 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஹசல்வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, ஜிதேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.. மிகப்பெரிய தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது..
முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது..இந்தசூழலில் ஹோபார்ட் மைதானத்தில் நடந்துவரும் 3வது டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதிவருகின்றன..
அதிரடியில் மிரட்டிய டிம் டேவிட் - ஸ்டொய்னிஸ்!
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா மூன்று பேரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது..
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஸ் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங்.. தொடர்ந்து மிட்செல் மார்ஷ் மற்றும் மிட்செல் ஓவன் இருவரையும் 11 மற்றும் 0 ரன்னில் வருண் சக்கரவர்த்தி வெளியேற்ற 73 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
ஒருபக்கம் விக்கெட்டாக விழுந்தாலும் மறுமுனையில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்ட டிம் டேவிட் 74 ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 64 ரன்கள் குவித்து அசத்த 20 ஓவரில் 186 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா..
187 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிவருகிறது, ஆஸ்திரேலியா அணியில் ஹசல்வுட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

