ஐசிசி ஆடவர் கிரிக்கெட் டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியல்: சூர்யகுமாரை பின்னுக்குத்தள்ளிய திலக் வர்மா!
தொடரை வென்ற இந்தியா
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா 69 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார்.
சமீபத்தில் இந்திய அணி தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங் போன்றவர்களது செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா என இருவரும் இரு போட்டிகளில் சதமடித்தனர். இதில், திலக் வர்மா இரு போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்திருந்தார்.
முதல் இரு போட்டிகளில் 4 ஆவது இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா முறையே 33 மற்றும் 20 ரன்களை எடுத்திருந்தார். இரண்டாவது போட்டி முடிந்த பின் கேப்டன் சூர்யகுமார் யாதவைச் சந்தித்த திலக் வர்மா, தான் மூன்றாவது இடத்தில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் உடனடியாக சரியென்று சொல்ல, மூன்றாவது போட்டியில் இருந்து மூன்றாவது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக ஆடி சதமடித்தார். நான்காவது போட்டியிலும் சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடியாக ஆடி தொடர்ச்சியாக இரண்டாவது சதமும் அடித்தார்.
மூன்றாவது இடத்தில் திலக்வர்மா
திலக் வர்மா 4 போட்டிகளில் இரு சதங்கள் உட்பட 280 ரன்களைக் குவித்தார். இதில் 20 சிக்சர்களும், 21 பவுண்டரிகளும் அடக்கம். அந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதினையும் திலக் வர்மா வென்றார். அந்த அற்புதமான ஆட்டத்தின் பலன் தொடரை வென்றதோடு அல்லாமல், ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் அவரை 69 இடங்கள் கடந்து மூன்றாவது இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.
திலக் வர்மா 20 டி20 போட்டிகளில் 19 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளார். மொத்தமாக 2 சதங்கள், 2 அரைசதங்கள் உட்பட 616 ரன்களைக் குவித்துள்ள அவர் 50 பவுண்டரிகளையும், 36 சிக்சர்களையும் விளாசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு தொடக்கத்தில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது ஒரு இடம் பின் சென்று 4ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். தென்னாப்ரிக்கா உடனான 4 போட்டிகளில் மூன்று இன்னிங்ஸில் விளையாடி 26 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
40 நாட்களில் 3 சதங்கள்
சஞ்சு சாம்சன் இரண்டு சதங்கள் அடித்த நிலையில், இந்தியா தென்னாப்ரிக்கா இடையிலான தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் 216 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதில் 19 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடக்கம். இவர் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 17 இடங்கள் முன்னேறி 22 வது இடத்திற்கு சென்றுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து தனது முதல் சதத்தினை பதிவு செய்ய அவருக்கு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதும் கடந்த 40 நாட்களுக்குள் அவர் 3 சதங்களை விளாசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 8 ஆவது இடத்திலும், ருதுராஜ் 15 ஆவது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பிலிப் சால்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.