2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த திலக் வர்மா, கடந்த 2 வருடங்களாக ஏறுமுகத்தையே கண்டுவருகிறார். 2022, 2023-ம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 25 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 39 சிக்சர்கள், 55 பவுண்டரிகள் உட்பட 3 அரைசதங்களுடன் 740 ரன்களை குவித்து அசத்தினார். 40 சராசரியுடன் பேட்டிங்கில் கலக்கிய அவருக்கு இந்திய டி20 அணியில் இடம்தேடிவந்தது.
கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பிடித்த திலக்வர்மா, தரௌபாவில் நடைபெற்ற விண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அதனைத்தொடர்ந்து, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை கண்டார்.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை எடுத்துவந்த அவர், இந்திய அணியின் நம்பிக்கைக்கான வீரராகவே மாறிவருகிறார். இந்நிலையில் 21 வயதான அவருக்கு தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்திய ஏ அணியிலும் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 24ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும், இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியில் விளையாடவுள்ளார்.
இதுபோன்ற சூழலில்தான் ரஞ்சிக்கோப்பையில் விளையாடிவரும் திலக் வர்மா, தொடர்ச்சியாக 2 போட்டிகளில் இரண்டு சதங்களை பதிவுசெய்து மிரட்டிவருகிறார்.
2024 ரஞ்சிக்கோப்பை தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் திலக் வர்மா, நாகாலாந்து கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாகாலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 112 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து சிக்கிமுக்கு எதிராக தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய அவர், 111 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவரது ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 384 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றியின் பக்கத்தில் இருக்கிறது.
இந்தியா சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், இளம் வீரர் துருவ் ஜூரெலுக்கு தனது முதல் டெஸ்ட் போட்டிக்கான அழைப்பை வழங்கியுள்ளது நிர்வாகம்.
இந்நிலையில்தான் இந்திய ஏ அணியில் இடம்பிடித்திருக்கும் திலக் வர்மாவிற்கு அடுத்த 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் திலக்வர்மாவும் ரஞ்சிக்கோப்பையில் கலக்கிவருகிறார். விரைவில் அவருடைய டெஸ்ட் அழைப்பை எதிர்ப்பார்க்கலாம்!