நான் நிற்கும்வரை ஆட்டம் முடியாது! தோனி, கோலி கொடுத்த அதே நம்பிக்கை! IND-வின் ஆபத்பாந்தவனாகும் திலக்!
அழுத்தம் நிறைந்த போட்டிகளில் தனியாளாக பொறுப்பை தோளில் சுமந்து வெற்றியை தேடிக்கொடுப்பதெல்லாம் கிரிக்கெட்டின் மாபெரும் கலை.. அந்த இடத்தில்தான் ஒரு வீரர் ஜாம்பவனாகும் திறனை வளர்த்துக்கொள்கிறார் என்று அர்த்தம். மகேந்திர சிங் தோனியும், விராட் கோலியும் அதை இந்திய அணிக்காக காலம்காலமாக செய்திருக்கும் சூழலில், அதே நம்பிக்கையை மீட்டெடுத்து வருகிறார் இந்தியாவின் இளம்வீரர் திலக்வர்மா.
தோனியோ, விராட் கோலியோ களத்தில் நிற்கும்வரை எப்படியாவது வெற்றியை தேடிக்கொடுத்துவிடுவார்கள் என்று டிவியை அணைக்காமல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் அதை பெரும்பாலான கடினமான சூழலில் இந்திய அணிக்காக செய்துகாட்டியுள்ளதே அதற்கு காரணம். நேற்றுகூட 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி ஆடிய தலைசிறந்த ஆட்டம் மீண்டும் புகழப்பட்டது. அதுதான் அழுத்தமான போட்டிகளில் நாட்டிற்காக நீங்கள் செய்வதற்கு கிடைக்கும் பாராட்டு. அது காலம்கடந்தும் பேசப்படும்.
அந்த வரிசையில் தான் இந்தியாவின் இளம் வீரர் திலக்வர்மா தன்னை பட்டைத்தீட்டி வருகிறார். நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 181 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி 5 ஓவர்களுக்கு கிட்டத்தட்ட 70 ரன்கள் அடிக்கவேண்டிய சூழலில் இந்தியா தோல்வியின் பக்கமே இருந்தது. ஆனால் அங்கிருந்து ஒருதரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக்வர்மா 26 பந்தில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து, இந்தியாவை ஒரு த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். நிதிஷ்குமார் ரெட்டியுடன் இணைந்து அவர் சேர்த்த 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான், 2009-க்கு பிறகு 7வது விக்கெட்டில் இந்தியாவிற்கு கிடைத்த சக்சஸ்ஃபுல் ரன்சேஸிங் ஆகும்.
திலக் வர்மா அழுத்தமான நேரத்தில் இந்தியாவிற்கு சிறப்பாக செயல்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் என்ற கடினமான சூழலில் களமிறங்கி வெற்றியை தேடிக்கொடுத்தார். அதேபோல தென்னாப்பிரிக்கா மண்ணில் 47 பந்தில் அதிரடி சதம், இங்கிலாந்துக்கு எதிராக 55 பந்தில் 72 ரன்கள் என பல அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
டெத் ஓவர்களான 16 to 20 ஓவர்களில் அவருடைய ஸ்ட்ரைக்ரேட் 231ஆக இருக்கிறது. இந்தசூழலில் தான் ’திலக் வர்மா அல்ல, Clutch வர்மா’ என ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். திலக் வர்மாவிற்கு வெறும் 23 வயது என்பதுதான், அவர் எதிர்காலத்தில் தோனி, கோலி போன்றவர்கள் செய்ததை நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

