போட்டி 23: வங்கதேசம் vs தென்னாப்பிரிக்கா
முடிவு: 149 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
ஆட்ட நாயகன்: குவின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா)
பேட்டிங்: 140 பந்துகளில் 174 ரன்கள் (15 ஃபோர்கள், 7 சிக்ஸர்கள்)
டி காக்கின் இந்த அமர்க்களமாக இன்னிங்ஸைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இந்த இன்னிங்ஸின் தொடக்க கட்டத்தை அவர் கையாண்ட விதத்தைப் பற்றிப் பார்க்கவேண்டும். அவர் அந்த இன்னிங்ஸை அணுகிய விதம் பாராட்டப்படவேண்டியது.
இந்தப் போட்டி டி காக்கிற்கு ஒரு மைல்கல் போட்டி. அவரது 150வது சர்வதேச ஒருநாள் போட்டி இது. இது ஒரு புறமிருக்க, பேட்டிங்குக்கு சொர்க்க பூமியான ஒரு மைதானத்தில் ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்து வந்திருக்கும் ஒரு அணியை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. போக, தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் தான் இந்த உலகக் கோப்பையின் மிகப் பெரிய பேசுபொருளாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட பேட்டிங் யூனிட்டின் ஓப்பனர், தன் மைல்கல் இன்னிங்ஸை ஆட வருகிறார். அதுவும் அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்து உலகக் கோப்பையை தொடங்கிவிட்டு, அடுத்த இரு போட்டிகளிலும் சேர்த்தே 24 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், நிச்சயம் அதிரடி காட்டவேண்டும் என்ற நோக்கத்தில் தான் களம் காண்பார். ஆனால் டி காக் அதை மட்டுமே தன் நோக்கமாக வைத்துக் களமிறங்கவில்லை.
பொதுவாக பல ஓப்பனர்கள் சொதப்புவதற்கு, அவர்கள் முன்கூட்டியே தீர்மானிப்பது ஒரு காரணமாக இருக்கும். டி காக் அப்படி எதுவும் செய்யவில்லை. ரன்ரேட், டார்கெட், எதிரணி என எதையும் அலட்டிக்கொள்ளாமல் பந்துகளை மதித்து ஆடினார். அடிப்பதற்கு ஏற்ற பந்துகளை டார்கெட் செய்தார். மற்ற பந்துகளை மதித்து ஆடினார். முடிந்த வரை ரொடேட் செய்ய முயற்சி செய்தார். மிகவும் நிதானமாகவும் பொறுப்போடும் தன் இன்னிங்ஸை கட்டமைத்தார் அவர்.
சீரான இடைவெளியில் பௌண்டரிகள் அடித்தார் டி காக். நன்கு ரொடேட் செய்தார். விக்கெட்டுகள் போனாலும் தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவரது அரைசதம் 48 பந்துகளில் வந்தது. அவர் ஸ்பின்னுக்கு எதிராகத் தடுமாறுவார் என்று ஆஃப் ஸ்பின்னர்களை ஷகிப் அடுத்தடுத்து பயன்படுத்தியும் இம்முறை டி காக் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. திடமாக தன் கால்களை ஆடுகளத்தில் ஊன்றியிருந்தார் டி காக். ஷகிப், முஸ்தாஃபிசுர், ஹசன் அஹமது, மெஹதி ஹசன் மிராஜ், ஷொரிஃபுல் என ஒவ்வொருவரின் பந்துகளும் சிக்ஸருக்கும் ஃபோருக்கும் பறந்தன. மார்க்ரமோடு இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். அடுத்து வரும் வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என்பதால், இவர்கள் விக்கெட் வீழாமலும், ரன்ரேட் குறையாமலும் இருப்பதில் கவனம் செலுத்தினார்கள். அதனால் புயல் வேக ஆட்டமெல்லாம் இல்லை. இருந்தாலும் பந்துக்கு பந்து ரன் வந்தது. டி காக்கின் அடுத்த 50 ரன்கள் 53 பந்துகளில் வந்தது. இதன் மூலம் இந்த உலக்க கோப்பையில் தன் மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் அவர்.
40வது ஓவர் வரை 95-105 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடிக்கொண்டிருந்தார் டி காக். 40 ஓவர்கள் கடந்துவிட்ட பிறகு அவரது வேகம் பன்மடங்கு கூடியது. முஸ்தாஃபிசுர் வீசிய 41வது ஓவரில் ஒரு ஃபோர். ஷொரிஃபுல் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸர். ஷகிப் வீசிய 43வது ஓவரில் 6.4.6.4 என அடுத்தடுத்து பறக்கவிட்டார். ஆனானப்பட்ட ஷகிப்பையே ஜஸ்ட் லைக் தட் டீல் செய்தார் அவர். அவரது மூன்றாவது 50 வெறும் 28 பந்துகளில் வந்தது. ஷொரிஃபுல் வீசிய 44வது ஓவரில் 2 ஃபோர்கள் என பௌண்டரிகள் பறப்பது தொடர்ந்துகொண்டே இருந்தது. எப்படியும் இரட்டைச் சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் டி காக். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் 407 ரன்கள் விளாசி அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருக்கிறார் டி காக்!
ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?
"சந்தோஷத்தை விட களைப்பு தான் அதிகமாக இருக்கிறது. இது ஒரு அட்டகாசமான நாள். எல்லோரும் வெற்றிக்குப் பங்காற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து புள்ளிகள் பெருவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் இன்று காலை கொஞ்சம் பற்றமாக இருந்தேன். எப்போதும் அப்படி பதற்றப்படமாட்டேன். ஆனால் களத்தில் ஜாலியாக விளையாடினேன்" என குவின்டன் டி காக் தெரிவித்தார்