The Unsung Hero - சிராஜ்| எத்தனை தோல்விகள், எத்தனை ட்ரோல்கள்.. விழவிழ எழுந்து நின்ற வீரனின் கதை!
கிரிக்கெட் உலகம் எப்போதும் பல்வேறு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரிகளை கண்டுள்ளது. அதிலும் பெரிதும் பின்புலம் இல்லாத, அடிப்படை வசதிகூட இல்லாத இடத்திலிருந்து வெறும் நம்பிக்கையை மட்டுமே பிடித்துக்கொண்டு மேலே வந்தவர்களின் கதைகள் எல்லாம் ஆகச்சிறந்த கதைகளாக கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அப்படியான இன்ஸ்பிரேஷன் நபர்களில் ’மகேந்திர சிங் தோனியும்’ ஒருவர்.
ஒன்றுமே இல்லாத இடத்திலிருந்து திறமையை மட்டுமே நம்பி முட்டிமோதி வெற்றிக்கண்ட மகேந்திர சிங் தோனியின் கதை பெரும்பாலானோரின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் கடந்து ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரின் மகன், தன்னுடைய ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் பல்வேறு ட்ரோல்களை சந்தித்த பிறகும், மீண்டும் மீண்டும் எழுந்துநின்று வென்று காட்டியதெல்லாம் எப்படியான இன்ஸ்பிரேஷன்..? இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் அப்படியொரு கடினமான பாதையில் பயணித்த பிறகுதான் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
வறுமை, வறுமை, வறுமை.. வேறு எதையும் காணாத சிராஜ்!
வழக்கமாக கிரிக்கெட் வீரர்களின் கதை என்றால் கடினமாக பயிற்சி செய்தேன், பல மைல் தூரம் பயணம் செய்தேன், பணம் நிறைய செலவுசெய்து முன்னேறினேன் என்ற ஒரே டெம்ப்லேட்டில் தான் இருக்கும். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் எதிர்கொள்ளாத சவால்களை எல்லாம் கண்ட ஒருவர் என்றால் அது சிராஜ் மட்டும் தான். ஹைதராபாத் நகர வீதிகளில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த ஆட்டோ தொழிலாளியான முகமது கவுஸின் மகன் தான் சிராஜ். அவரது அம்மா ஷபானா பேகம் வீட்டு வேலை செய்யும் பணியை கவனித்து கொள்ளும் சாதாரண ஏழ்மையான குடும்பத்து பெண்.
வறுமை தான் சிராஜின் பின்னணி, சொல்லமாளாத வறுமையை அவர் பால்ய பருவத்தில் எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் சிறு வயதில் அவருக்குள் கிரிக்கெட் ஆசை துளிர்விட்டது. முதலில் முகமது சிராஜ் கையில் எடுத்தது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றுதான். ஒருகட்டத்தில் கிரிக்கெட் என்றால் சிக்ஸர் அடிக்கும் பேட்ஸ்மேன் மட்டும் தானா, நாம் ஏன் விக்கெட்டுகளை வேட்டையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஆகக்கூடாது என்ற கேள்வி அவருக்குள் எழ சிராஜ் பந்துவீச்சாளராக உருமாறினார். அவரின் அந்த முடிவிற்கு அவரது நண்பர்களும் ஒரு காரணம்.
குடும்ப வறுமையினால் கல்லி கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்த சிராஜ், தொழில்முறை கிரிக்கெட் பயிற்சி என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் தான் வளர்ந்தார். ஆனால் சிராஜின் பந்துவீசும் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த நண்பர் ஒருவர், 2015-ம் ஆண்டு சார்மினார் கிரிக்கெட் கிளப்பில் வலைப்பயிற்சியின் போது கிளப் வீரர்களுக்கு பந்துவீச சிராஜை அழைத்துச்சென்றார். அங்கு சிராஜின் பந்துவீச்சை பார்த்து மிரண்டு போன அந்த கிளப் அணி அடுத்த போட்டியில் சிராஜை விளையாட வைத்து அழகு பார்த்தது. அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ள, அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறந்ததை போல 23 வயதுக்குட்பட்ட மாநில அணியில் இடம் பிடித்தார் சிராஜ்.
அங்கிருந்து முட்டிமோதி ரஞ்சிக்கோப்பை, ஐபிஎல், இந்திய டி20 அறிமுகம் என முன்னேறிய சிராஜ், கையில் வைத்திருந்த ஒரே ஆயுதம் ”எவ்வளவு ஓவர் வேண்டுமானாலும் கொடுங்கள் நான் வீசுகிறேன்” என்பதுதான். இதுகுறித்து சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது பேசிய பத்ரிநாத், தான் விளையாடிய போது சிராஜ் என் கையில் பந்தை கொடுங்கள் நான் வீசுகிறேன் என எப்போதும் கூறுவார், 20 ஓவர்கள் வீசினாலும் அவரிடமிருந்து அந்த வார்த்தைகள் தான் வரும் என்று கமெண்டரியில் தெரிவித்தார்.
யாரும் சந்திக்காத வேதனையை அனுபவித்த சிராஜ்..
தன்னுடைய கடின உழைப்பால் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் சிராஜ், கிரிக்கெட்டராக கனவுகண்ட அவருடைய வாழ்வில் மிகப்பெரிய வாய்ப்பு, ஆனால் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய தருணத்தில் பேரிடியாக வந்துசேர்ந்தது ஒரு செய்தி. வறுமை, தோல்வி, ஏமாற்றம் என வாழ்க்கையில் பல்வேறு வலிகளை கண்ட சிராஜால், இந்த வலியை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வந்தது அவரது அப்பாவின் மரண செய்தி, அதை கேட்ட சிராஜின் கண்களில் கண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்தது.
முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ் 53 வயதில் நுரையீரல் நோய் காரணமாக மரணமடைந்தார். சிட்னியின் ஓவலில் பயிற்சி அமர்வை முடித்திருந்த சிராஜுக்கு தந்தையின் இறப்பு செய்தி பேரிடியாக வந்தது. சோகத்தில் மூழ்கிய அவரை அணி வீரர்களும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும்தான் தேற்றினர்.
இதில் ஏற்றுக்கொள்ளவே முடியாத வேதனை என்னவென்றால் முகமது சிராஜ் இல்லாமல் தான் அவருடைய தந்தையின் இறுதிசடங்குகள் நடந்தன. ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த அவரால் இந்தியாவிற்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டது. தாளமுடியாத வேதனையிலும் இந்தியாவிற்காக பந்துவீசிய சிராஜ் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிராஜின் பந்துவீச்சை ரிக்கி பாண்டிங் பாராட்டித் தள்ளினார். போட்டிக்கு பிறகு ‘நான் இந்தியாவிற்காக விளையாடுவதை என் தந்தை பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்று கலங்கிய படி தெரிவித்தார். பின்னர் இந்தியாவிற்கு வந்து கல்லறையில் தான் தனது தந்தையை பார்த்தார் முகமது சிராஜ்.
இதில் மற்றொரு சோகம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் முகமது சிராஜ் நிறவெறி கிண்டல்களையும் எதிர்கொண்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது, சில ஆஸ்திரேலியா ரசிகர்கள் சிராஜை நிறத்தை வைத்து கிண்டல் செய்தனர்.
பும்ராவை விட சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கும் சிராஜ்..
இந்திய கிரிக்கெட்டில் ஃபிட்டஸ்ட்டான வீரர் யார் என்றால் எல்லோரும் விராட் கோலியின் பெயர்களை தான் முதலில் சொல்வார்கள், ஆனால் இந்திய அணியின் ஆகச்சிறந்த ஃபிட்டஸ்ட் வீரர் என்றால் அது முகமது சிராஜ் மட்டும் தான்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் என அனைவரும் காயத்தால் பாதிக்கப்பட்டு ஓய்வில் சிகிச்சையில் இருந்துள்ளனர். ஆனால் சிராஜ் எப்போது காயத்தால் ஓய்வில் இருந்தார் என்று யோசித்தால், நமக்கு எந்த நிகழ்வும் அப்படி நினைவில் வராது. அப்படியான ஒரு ஃபிட்னஸ் உடன் முகமது சிராஜ் இருந்துவருகிறார். பும்ரா இல்லாத டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் விக்கெட் டேக்கிங் பவுலராகவும், மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்களை உடைக்கும் பவுலராகவும் சிராஜே எப்போதும் இருந்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டுமுதல் இந்தியாவிற்காக அதிக ஓவர்கள் வீசியவர் என்றால் அதுவும் சிராஜ் தான். 53 போட்டிகளில் விளையாடி 683 ஓவர்களை சிராஜ் வீசியுள்ளார், அதேநேரத்தில் பும்ரா 42 போட்டிகளில் விளையாடி 560 ஓவர்களை மட்டுமே வீசியுள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் பும்ராவை விட அதிக ஓவர்கள் வீசியவர் சிராஜ் தான். 157 ஓவர்களை சிராஜ் வீசியிருந்த நிலையில், பும்ரா 151 ஓவர்களை வீசியிருந்தார்.
ஆனால் அவர் காயத்தால் அவதிப்படவில்லை, மாறாக தொடரில் அதிக விக்கெட்டுகள் (20) வீழ்த்திய இரண்டாவது பவுலராக இருந்தபோதும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பழைய பந்துகளில் சிராஜ் எஃபக்டிவாக இல்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா பகிரங்கமாக தெரிவித்தார்.
மீண்டும் தன்னை மெருகேற்றி தரமாக வந்த சிராஜ்..
ரோகித் சர்மாவின் கருத்தை தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார் முகமது சிராஜ். இது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய திறமை மீது எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட சிராஜ் 2025 ஐபிஎல் தொடரில் 2.ஒ வெர்சனாக திரும்பிவந்து நெருப்பாக பந்துவீசினார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் குறைவான வேகத்தில் வீசியிருந்த சிராஜ், 2025 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 140-க்கு மேலான வேகத்தில் வீசினார். மேலும் சீம் வேரியேசனிலும் மெருகேற்றிய அவர், இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என மிரட்டி விக்கெட் வேட்டை நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ், இந்தியாவை ஒரு வரலாற்று வெற்றிக்கு வழிநடத்தினார். ஒவ்வொரு முறை தன்மீது விமர்சனங்கள் வைக்கப்படும்போதும் தன்னுடைய பந்துவீச்சால் பதிலடி கொடுக்கும் சிராஜ், தற்போதுவரை கொண்டாடப்படாத ஒரு வீரராகவும், அதிகம் மதிக்கப்படாத ஒரு பவுலராகவுமே இருந்துவருகிறார்.
சிராஜை நம்பவேண்டிய காலம் இது..
டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பின்னால் சிராஜ் ஒரு மாற்று வீரராக நடத்தப்படுகிறார் என்று சொல்வது உண்மைதான் என்றாலும், அவரது அபாரமான செயல்திறன் மூலம் அவர் ஒரு துணை வீரரை விட முக்கியமானவர் என்பதை எப்போதும் நிரூபித்துள்ளார். அவரால் புதிய பந்தை ஸ்விங் செய்யவும், பழைய பந்தை ரிவர்ஸ் செய்யவும், தட்டையான பிட்ச்சிலிருந்து பவுன்ஸையும் எடுத்துவர முடியும்.
மிக முக்கியமாக, அவர் எப்போதும் களத்தில் நெருப்பையும், உணர்ச்சி, ஆற்றல் மற்றும் தீவிரத்தையும் கொண்டு வருகிறார். நீங்கள் அதை அவரது கொண்டாட்டங்களிலும், கர்ஜனைகளிலும் பார்க்கலாம். சிராஜ் தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார். அப்படியான ஒரு வீரரை புள்ளிவிவரங்களால் மட்டும் உங்களால் அளவிட முடியாது. நாம் அவர் மீது நம்பிக்கையை அதிகமாக வைக்க வேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும்.
ஏனென்றால் பும்ரா இல்லாத ஆட்டங்களில் நம்மை அதிக வெற்றிகளுக்கு அழைத்துச்செல்லும் ஒரு பவுலராக அவர் மட்டுமே நீடிக்கிறார். சொல்லப்போனால் பும்ரா இந்தியாவிற்கு ஆடிய ஆட்டங்களைவிட, ஆடாத ஆட்டங்களில் தான் இந்திய அணி அதிக வெற்றிகளை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாகவும் சிராஜ் இருந்துள்ளார்.
இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்தவீரர்கள் இல்லாத போது, பும்ராவும் நிலையில்லாத உடற்தகுதியுடன் இருந்துவருகிறார். இதனால் பும்ரா இல்லையென்றால் பந்துவீச்சை தலைமை தாங்கும் ஒருவர் இந்திய அணிக்கு தேவை, அதற்கான நம்பிக்கையை சிராஜுக்கு இந்திய நிர்வாகம் கொடுக்க வேண்டும். விமர்சனங்களை விட, அவர் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைக்க வேண்டும். 31 வயதை எட்டியிருக்கும் சிராஜ் தன்னுடைய அனுபவத்தை இளம் பவுலர்களுக்கு வழங்க முடியும், அவர் அதற்கான அத்தனை உழைப்பையும் போட்டு நம்பிக்கையையும் சம்பாதித்து உள்ளார்.
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய ஒரு வழிகாட்டியாக சிராஜை இந்தியா தயார்படுத்த வேண்டும், அப்படி செய்தால் தான் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் இடத்திற்கு செல்லும்.
அவன் ஒன்றுமில்லாமல் தொடங்கினான்.. தன் ஆவி, உடல் என எல்லாவற்றையும் கொடுக்கிறான்.. அவனை நம்புங்கள்.. அவன் அதை சம்பாதித்துவிட்டான்!