இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோல்வி.. பாகிஸ்தானுக்கு உயிர்பெற்ற வாய்ப்பு! ரன் விகிதம் என்ன?
2026 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததால், பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உயிர்பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுப் பிரிவில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
அதெபோல தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்ற இலங்கை அணி சொந்தமண்ணில் நடக்கும் உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.
மற்றொரு பிரிவில் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்தநிலையில் ஒரு பிரிவில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கும், மற்றொரு பிரிவில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே அரையிறுதி தகுதிக்கான போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து தோல்வி..
இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு இருந்தது.
இந்தசூழலில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்தபோதும் கடைசியில் இலக்கை எட்டி அசத்தலான வெற்றியை உறுதிசெய்தது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மங்கியும், பாகிஸ்தானுக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு உயிர்பெற்றும் உள்ளது.
பாகிஸ்தானுக்கு இருக்கும் வாய்ப்பு என்ன?
நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு உயிர்பெற்றுள்ளது. தற்போது +1.390 ரன்ரேட்டில் நீடிக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி -0.461 ரன்ரேட்டில் உள்ளது.
இந்தசூழலில் நாளை நடக்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலோ அல்லது 13.1 ஓவரில் இலக்கை சேஸ்செய்தாலோ நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.
ஆனால் சொந்தமண்ணில் அடுத்தடுத்த 2 தோல்விக்கு பிறகு வரும் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

