T20 WC | இறுதியில் மிரட்டல்.. மிரண்டுபோன இந்தியா.. 17 ரன்னில் தோல்வியைத் தழுவிய நெதர்லாந்து!
டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடர்ந்து நடப்புத் தொடரில் தோல்வியே காணாத அணியாக வலம் வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. இதற்கிடையே, லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி, தொடரின் 36ஆவது போட்டியில் இந்தியா - நெதர்லாந்து ஆகிய் அணிகள் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மாவும், இஷான் கிஷானும் இன்னிங்ஸைத் தொடங்கினர். வழக்கம்போலவே இந்தப் போட்டியிலும் அபிஷேக் சர்மா டக் அவுட் முறையில் வீழ்ந்தார். ஏற்கெனவே அவர் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் முறையில் அவுட் ஆகி இருந்தார். மறுபுறம், கடந்த போட்டியில் மிரட்டிய இஷான் கிஷான், இன்று 18 ரன்களில் நடையைக் கட்டினார். அவர் ஆர்யன் பந்துவீச்சில் போல்டானார். என்றாலும் அதற்குப் பின் வந்த திலக் வர்மா 31 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் 34 ரன்களும் எடுத்தனர். அதேநேரத்தில் ஷிவம் துபே சற்றே அதிரடி காட்டினார். அவர் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதேபோல், ஹர்திக் பாண்டியாவும் இறுதிக் கட்டத்தில் 30 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் 3 விக்கெட்களையும், ஆர்யன் டட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர், 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, தொடக்க்த்தில் மைக்கேல் லெவிட் (24 ரன்கள்), மேக்ஸ் ஓடவுடு (20 ரன்கள்), பேஸ் டே லீடே (33 ரன்கள்), காலின் (23 ரன்கள்) ஆகிய தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். என்றாலும் அந்த அணியின் விக்கெட்கள் இடையிடையே சரிந்தது. அதிலும் பின்வந்த வீரர்கள் சோடை போயினர். எனினும், கடைசியாய் இறங்கிய கேட்சட்டும் குரோஸும் இந்திய அணியின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். குறிப்பாக, ஹர்திக் பாண்டியா வீசிய 19ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரி என 18 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அணி வெற்றிபெறும் என இந்தியாவே எதிர்பார்த்தது. இறுதியில், 6 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை ஷிவம் துபே வீசினார். அதில் முதல் இரண்டு ரன்கள் எடுக்க, இரண்டாவது பந்தில் சூர்யகுமாரும் ரிங்கும் கேட்சை மிஸ் செய்தனர். இதனால் அந்தப் பந்தில் இரண்டு ரன்கள் வந்தது. அடுத்து, 3வது பந்திலும் திலக் வர்மா கேட்சை மிஸ் செய்தார். அந்தப் பந்திலும் 2 ரன்களும் வந்தது. என்றாலும் 4வது பந்தில் கேட்செட் கொடுத்த கேட்சை வாஷிங்டன் சுந்தர் கச்சிதமாகப் பிடித்து வெளியேற்றினார். 5வது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படாத நிலையில், கடைசி பந்து பவுண்டரியானது. இதன்மூலம் நெதர்லாந்தின் தோல்வியும் உறுதியானது. இறுதிவரை போராடிய அந்த அணி வெறும் 17 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடர்ந்து நடப்புத் தொடரில் தோல்வியே காணாத அணியாக வலம் வருகிறது.

