T20 WC | 0, 0, 0.. சாதனையில் இணைந்த அபிஷேக்.. மானத்தைக் காப்பாற்றிய ஷிவம் துபே!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நெதர்லாந்து அணி வெற்றி பெற 194 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில், அபிஷேக் சர்மா டக் அவுட் முறையில் வீழ்ந்தார். இதன்மூலம் டக் அவுட் முறையில் வீழ்ந்தவர்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்தார். அதேநேரத்தில், ஷிவம் துபே அபாரமாக ஆடி அரைசதம் அடித்தா.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. இதற்கிடையே, லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி, தொடரின் 36ஆவது போட்டியில் இந்தியா - நெதர்லாந்து ஆகிய் அணிகள் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மாவும், இஷான் கிஷானும் இன்னிங்ஸைத் தொடங்கினர். வழக்கம்போலவே இந்தப் போட்டியிலும் அபிஷேக் சர்மா டக் அவுட் முறையில் வீழ்ந்தார். ஏற்கெனவே அவர் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் முறையில் அவுட் ஆகி இருந்தார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் டக் அவுட் ஆனதைத் தொடர்ந்து, டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஆஷிஷ் நெக்ராவுடன் இணைந்தார். அவரும் 3 முறை அவுட் ஆகியுள்ளார்.
இவர்களைத் தவிர வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே பிளெட்சர், யுஜிஏ வீரர் ரோஜர் முகசா ஆகியோரும் தலா 3 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். மேலும் டி20களில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை டக் அவுட் மூலம் ஆட்டமிழந்த தொடக்க வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர், 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவருடன் இன்னும் 4 வீரர்கள் இந்த இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் உள்ளார். அவர் 6 முறை டக் அவுட் ஆகியுள்ளார். மறுபுறம், கடந்த போட்டியில் மிரட்டிய இஷான் கிஷான், இன்று 18 ரன்களில் நடையைக் கட்டினார். அவர் ஆர்யன் பந்துவீச்சில் போல்டானார்.
இவரது பந்துவீச்சில்தான் அபிஷேக்கும் போல்டாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அதற்குப் பின் வந்த திலக் வர்மா 31 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் 34 ரன்களும் எடுத்தனர். அதேநேரத்தில் ஷிவம் துபே சற்றே அதிரடி காட்டினார். அவர் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதேபோல், ஹர்திக் பாண்டியாவும் இறுதிக் கட்டத்தில் 30 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் 3 விக்கெட்களையும், ஆர்யன் டட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

