
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து உடனான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 215 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியைப் பார்க்க பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நாடெங்கும் இருந்து அகமதாபாத்தில் குவிய உள்ளனர். இந்த போட்டியின் போது பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும் உலகக்கோப்பைகளை வென்றவர்களுமான கபில்தேவ், தோனி போன்றோரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இறுதிப்போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நிமிடங்கள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஒத்திகை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. இந்திய விமானப்படையின் சூரிய கிரண் பிரிவில் 9 விமானங்கள் உள்ளன. இவற்றை கொண்டு சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.