லக்னோ அணியின் அதிரடி வெற்றி: ஹைதராபாத் அணிக்கு முதல் தோல்வி!
ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணி விளையாடும் போட்டி என்றாலே 200 ரன்கள், 250 ரன்கள் கன்பார்ம் வந்துடும் என்ற அளவிற்கு அதிரடி நிச்சயமாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த அணியில் உள்ள டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் எதிரணி வீரர்களின் பந்துவீச்சை மொத்துமொத்து என்று வெளுத்துவிடுகிறார்கள். ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவித்து ஐபிஎல் ரசிகர்களின் புருவங்களை மீண்டும் உயர வைத்தது. அந்த வகையில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போட்டி துவங்கியது. போட்டியில் என்ன நடந்தது வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்க, லக்னோ அணிக்காக முதல் ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் அடிக்க, மூன்றாவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர், அபிஷேக் ஷர்மா விக்கெட்டை முதல் பந்தில் சாய்த்ததோடு அடுத்து வந்த இஷான் கிஷனை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். கடந்தப் போட்டியில் சதம் விளாசியிருந்த இஷான் கிஷனை டக் அவுட் ஆக்கி வெளியேற்றியது லக்னோ அணிக்கு பெருமூச்சாக இருந்தது.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சாய்ந்ததால் ஆட்டம் மந்தமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ’நான் இன்னும் களத்தில் இருக்கிறேன்’ என்பதை காட்டிய ஹெட், சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டார். ஆவேஷ் கான் வீசிய 4வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி பறக்கவிட இவரது அதிரடியை எப்படி கட்டுப்படுத்த போகிறோம் என லக்னோ நினைக்க தொடங்கிவிட்டார்கள். அதற்கு ஏற்றாற்போல் பிஷ்னோய் வீசிய 6வது ஓவரில் டிராவிட் ஹெட் அழகான கேட் கொடுத்தார். ஆனால், அழகான அந்தக் கேட்சை கோட்டை விட்டு லக்னோ ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார் நிக்கோலஸ் பூரன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளுத்து வாங்கப் போகிறார், இன்றைக்கு சதம் கன்ம்பார்ம் என்று நினைத்த வேளையில், நல்ல வேலையாக மேற்கொண்டு ஒரு சிக்ஸர், பவுண்டரியோடு நிறுத்திக் கொண்டார் டிராவிஸ் ஹெட். ஆம், பிரின்ஸ் யாதவ் வீசிய 8வது ஓவரில் க்ளீன் போல்ட் ஆகி 47 ரன்களில் நடையைக் கட்டினார்.
சரி ஹெட் தான் போயிட்டார் நிதிஷ் குமார் ரெட்டி இருக்கார் என நினைத்தால் பெரிய அளவில் ஷாட்கள் அடிக்க முடியாமல் அவரோ திணறினார். நன்றாக விளையாடி வந்த ஹெண்ட்ரிச் க்ளாசன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டியும் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சியாக இறங்கியது. முக்கியமான 5 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால் 160 ரன்களுக்குள் ஹைதராபாத்தை கட்டுப்படுத்தி விடலாம் என லக்னோ நினைத்தால், அடுத்து வந்த அனிகெட் வெர்மா சூறாவளியாக பேட்டிங் செய்து சிக்ஸர் மழை பொழிந்தார்.
தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட்ட அனிகெட், ரவி பிஸ்னோய் ஓவரில் மீண்டும் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். மீண்டும் திக்விஷ் ரதி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். மொத்தம் 5 சிக்ஸர்கள் விளாசிய அனிகெட் வெர்மா வெறும் 13 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் தன் பங்கிற்கு 3 சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார். ஒருவர் கூட அரைசதம் அடிக்காத சூழலிலும் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் லக்னோ அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தி ஹைதராபாத் அணியை 200 ரன்கள் எடுக்காமல் கட்டுப்படுத்தினார். இரண்டு போட்டிகளில் 6 விக்கெட் சாய்த்து பர்ப்பிள் கேப்பை வசப்படுத்தினார் ஷர்துல் தாக்கூர்.
191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அபிஷேக் ஷர்மா வீசிய முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் மார்க்கரம் ஒரு ரன்னில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், லக்னோ அணி 191 ரன்கள் என்ற இலக்கை எட்ட தடுமாறும் என தோன்றியது. ஆனால், அந்த இடத்தில் இருந்து ஆட்டத்தை கையில் எடுத்தார் நிக்கோலஸ் பூரன். என்னா அடி.. கொஞ்சமும் கருணையே இல்லாமல் ஹைதராபாத் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டார் பூரன். மிட்செல் மார்ஸும் தன் பங்கிற்கு அதிரடி காட்டி வர, பூரனோ வேறொரு மோடில் ரன் மழை பொழிந்தார். சிமர்ஜீட் சிங் வீசிய 3வது ஓவர், ஷமி வீசிய 4வது ஓவர், அபிஷேக் ஷர்மா வீசிய 5வது என தொடர்ந்து 3 ஓவர்களில் தலா இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி பறந்தது. பேட் கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட பவர் பிளேவான முதல் 6 ஓவர்களில் மட்டுமே லக்னோ அணி 77 ரன்கள் குவித்தது. வெறும் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார் நிக்கோலஸ் பூரன்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பூரன் 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து பேட் கம்மின்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஸும் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அதாவது செட்டில்டு பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆட்டமிழந்ததால் லக்னோ அணியின் வெற்றியை தட்டிப்பறிக்க ஹைதராபாத் யோசித்தது.
அதுக்கேத்தாப்போல பதோனி 6 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். வெற்றி வாய்ப்புள்ள முக்கியமான போட்டியில் கேப்டனான ரிஷ்ப் இப்படி ஆட்டமிழந்தது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டியது. சென்ற போட்டியிலேயே அவர் 6 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு ஆளானார். இந்த நேரத்தில்தான் ஹைதராபாத் அணியின் எண்ணத்தை தவிடுபொடியாக்கினார் அதுல் சமத். களமிறங்கிய ஓவரிலேயே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு லக்னோ ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்தார். அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி வெற்றி நிச்சயம் என்பதை உறுதி செய்தார் சமத். 16.1 ஓவரிலேயே லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
பலரும் ஹைதராபாத் அணி தான் ஜெயிக்கும் என்று நினைத்திருந்த நிலையில் ஷர்துல் மற்றும் நிக்கோலஸ் பூரனின் சிறப்பான ஆட்டத்தால் லக்னோ அணி தன்னுடைய முதல் வெற்றியை கெத்தாக பதிவு செய்தது. தன்னுடைய முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்ற ஹைதராபாத் அணி முதல் தோல்வியை தழுவியது. 4 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாக்கூர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையிலேயே இந்தப் போட்டி அமைந்தது.