சிக்ஸர் மழை.. ஹைதராபாத் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய நிக்கோலஸ் பூரன்.. லக்னோ அணி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்ய ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் அடிக்கப்பட்டது. மூன்றாவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர், அபிஷேக் ஷர்மா விக்கெட்டை முதல் பந்தில் சாய்த்ததோடு அடுத்து வந்த இஷான் கிஷனை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். கடந்தப் போட்டியில் இஷான் சதம் விளாசியிருந்தார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சாய்ந்ததால் ஆட்டம் மந்தமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான் இன்னும் களத்தில் இருக்கிறேன் என்பதை காட்டினார் ஹெட். சிக்ஸரும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார் மீண்டுமொரு முறை மிரட்டினார். ஆவேஷ் கான் வீசிய 4வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். பிஷ்னோய் வீசிய 6வது ஓவரில் டிராவிட் ஹெட் கொடுத்த அழகான கேட்சை கோட்டை விட்டார் பூரன்.
நல்ல வேலையாக மேற்கொண்டு ஒரு சிக்ஸர், பவுண்டரியோடு நிறுத்திக் கொண்டார் ஹெட். ஆம், பிரின்ஸ் யாதவ் வீசிய 8வது ஓவரில் க்ளீன் போல்ட் ஆகி 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்களில் வெளியேறினார் டிராவிஸ் ஹெட்.
நிதிஷ் குமார் ரெட்டி பெரிய அளவில் ஷாட்கள் அடிக்க முடியாமல் திணறினார். நன்றாக விளையாடி வந்த ஹெண்ட்ரிச் க்ளாசன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டியும் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முக்கியமான 5 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால் 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று நினைத்தால் அனிகெட் வெர்மா சூறாவளியாக பேட்டிங் செய்து சிக்ஸர் மழை பொழிந்தார்.
தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட்ட அனிகெட், ரவி பிஸ்னோய் ஓவரில் மீண்டும் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். மீண்டும் திக்விஷ் ரதி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். மொத்தம் 5 சிக்ஸர்கள் விளாசிய அனிகெட் வெர்மா வெறும் 13 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் தன் பங்கிற்கு 3 சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார்.
ஒருவர் கூட அரைசதம் அடிக்காத சூழலிலும் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47(28) ரன்கள் எடுத்தார்; லக்னோ அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் மொத்தம் 6 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் கேப்பை வசப்படுத்தினார் ஷர்துல் தாக்கூர். சிஎஸ்கே வீரர் நூர் அஹ்மது 4 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
191 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பூரன் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். பின்னர், 26 பந்துகளில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிக்கோலஸ் பூரான். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷேன் மார்ஸ் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லக்னோ அணி 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து விளையாடியது. 48 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால், பதோனி 6 ரன்களுலும், ரிஷப் பந்த் 15 (15) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், காற்று ஹைதராபாத் பக்கம் வீசுமோ என்ற நிலை உருவானது. ஆனால் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது என சமத் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்தார். 16.1 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து லக்னோ அசத்தல் வெற்றி பெற்றது. சமத் 22(8), மில்லர் 13 (7) ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.