அப்டேட் செய்யப்பட்ட SA டி20 உலகக்கோப்பை அணி.. ஸ்டப்ஸ், ரிக்கல்டனுக்கு மீண்டும் வாய்ப்பு!
2026 டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் ரிக்கல்டன் மற்றும் ஸ்டப்ஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த இரண்டு வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் அணியின் வலிமையை அதிகரிக்க உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 5 அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனாக களமிறங்கவிருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழலில், ஒவ்வொரு அணிகளும் 15 பேர்கள் கொண்ட ஸ்குவாடை உறுதிசெய்துவருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் அறிவிக்கப்பட்டிருந்த 15 பேர் கொண்ட அணியில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது.
2 பேர் OUT.. 2 பேர் IN..
முதலில் அறிவிக்கப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில், கடந்த 2024 டி20 உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த டிகாக், மார்க்ரம், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே, கேசவ் மஹாராஜ் முதலிய 7 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.
மேலும் புதிய வீரர்களாக கார்பின் போஷ், டெவால்ட் ப்ரேவிஸ், டோனி டி சோர்ஸி, டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா மற்றும் ஜேசன் ஸ்மித் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் கடந்த உலகக்கோப்பையில் இடம்பெற்ற ரிக்கல்டன், ஸ்டப்ஸ் இருவரும் இடம்பிடிக்காமல் இருந்தனர்.
இந்தசூழலில் தான் தற்போது அப்டேட் செய்யப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் ரிக்கல்டன் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். டோனி டி சோர்ஸி, டோனோவன் ஃபெரீரா இருவரும் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

