இங்கிலாந்து அணியின் டெஸ்ட் ’Head-Coach’ ஃபிளெமிங்.. கேப்டனாக திரும்புகிறார் ஜோ ரூட்!
பென் ஸ்டோக்ஸ் ஓய்வு, மெக்கல்லம் பதவிக்கால முடிவுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புதிய திசை அமைக்க ஸ்டீபன் ஃபிளெமிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கேவுடன் 7 கோப்பைகள் வென்ற அனுபவம், நியூசிலாந்து கேப்டனாக இருந்த வெற்றி சராசரி ஆகியவை அவருக்கு ஆதாரமாகும். ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக திரும்புவது அணிக்கு புதிய உற்சாகம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதோடு, தலைமை பயிற்சியாளராக இருந்த ப்ரெண்டன் மெக்கல்லம் பதிவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இவ்விருவரின் தலைமைக்கு கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘பாஸ் பால்’ அணுகுமுறையை கையாண்ட இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் பாராட்டப்பட்டாலும், பின்னர் அது ரிசல்ட்டாக மாறாத போது விமர்சிக்கப்பட்டது.
கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை அடிக்கும் அணியாக முன்னேறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இடையில், மெக்கல்லமிற்கு பிறகு யார் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
ஆரம்பத்தில் ராகுல் டிராவிட், ஆண்டி பிளவர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்டின் லாங்கர், ஜனதன் டிராட் என பல பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஸ்டீபன் ஃபிளெமிங் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் ஜோ ரூட்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக திரும்ப உள்ளார். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
18 ஆண்டுகள் சிஎஸ்கே அணியுடன் பயணித்த ஸ்டீபன் பிளெமிங் 5 ஐபிஎல் கோப்பை, 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பை என 7 கோப்பைகளை வென்றுள்ளார். அதேபோல இங்கிலாந்து 100 லீக்கில் பிரேவ் அணியை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சிறந்த வின்னிங் சராசரியை வைத்திருக்கும் பிளெமிங், ஹோம் ஆஃப் கிரிக்கெட்டின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவை நோக்கி புதிய பயணத்தை தொடங்க உள்ளார். நிறைய ஸ்டார் வீரர்கள் இருக்கும் அணியை சிறப்பாக வழிநடத்தும் யுக்தியை வைத்திருக்கும் பிளெமிங் இங்கிலாந்து அணியை சிறந்த நிலைக்கு எடுத்துச்செல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
அதேபோல இங்கிலாந்தை 65 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி இருக்கும் ஜோ ரூட் 27 வெற்றிகளையும், 11 டிராக்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார். ஜோ ரூட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர் கேப்டனாக திரும்புவது புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

