Asiacup| சூப்பர் 4க்குத் தகுதிபெற்ற இலங்கை.. மகனின் பந்துவீச்சைப் பார்த்து உயிரிழந்த தந்தை!
ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெற்ற இலங்கை!
8 அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 169 ரன்களை எடுத்தது. அந்த அணி வீரர் முகமது நபி, 22 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக, குசால் மென்டிஸ் 74 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியையடுத்து பி பிரிவிலிருந்து, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த சுற்று முன்னேறாமல் வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன்
தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரசித் கான், “நாங்கள் சரியாகச் செயல்பட்டு இருந்தால் நிச்சயமாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் முன்னோக்கி ஓர் அணியாக நாங்கள் செல்ல வேண்டும். ஒரே தவறை திரும்பச் செய்யக்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் பல ஐசிசி தொடர், ஆசிய கோப்பைத் தொடர் என அனைத்துமே சிறப்பாக விளையாடுகிறோம். ஒவ்வொரு தொடருக்கும் நாங்கள் நல்ல முறையில் பயிற்சி செய்கின்றோம்.
நான் எங்கள் அணி வீரர்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன். ஆனால் முதல் சுற்றில் இருந்து நாங்கள் வெளியேறுவோம் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதி வரை நாம் சென்றிருக்கிறோம். இதனால் சூப்பர் 4 வரையாவது நாம் சென்றிருக்க வேண்டும். இதுதான் ரசிகர்கள் நம்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு. நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை ஆய்வு செய்து மீண்டும் ஒரு பலமான அணியாக திரும்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்
மகனின் பந்துவீச்சைப் பார்த்து உயிரிழந்த தந்தை
இதற்கிடையே இந்தப் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே வீசினார். அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட முகமது நபி தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன்மூலம் அந்த ஓவரில் 32 ரன்கள் கொடுக்கப்பட்டது. எனினும், இந்தப் போட்டியை இலங்கையில் தொலைக்காட்சியில் கண்டுகளித்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே, தனது மகனின் பந்துவீச்சைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாதிக்கும் என கவலை அடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சுரங்காவிற்கு அப்போதே மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போட்டிக்குப் பிறகு தந்தையின் மரணச் செய்தி குறித்து துனித்திடம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் முன்னணி பள்ளி அணிகளில் ஒன்றின் தலைவராக இருந்தவர் சுரங்கா வெல்லாலகே என்பது குறிப்பிடத்தக்கது.