சூப்பர் 8| சொந்தமண் இலங்கைக்கா? இங்கிலாந்துக்கா? 95 ரன்னில் சுருண்டு இலங்கை படுதோல்வி!
2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 95 ரன்னில் சுருண்ட இலங்கை, தொடர்ந்து 12வது முறையாக இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பல பரபரப்பான ஆட்டங்களை பார்த்து வருகிறது. ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது. மேலும் 2026 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது.
லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் சூப்பர் 8 போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
95 ரன்னில் சுருண்ட இலங்கை..
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பிலிப் சால்ட் ஒருவர் மட்டுமே 62 ரன்கள் அடித்து அசத்தினார்.
சொந்தமண்ணில் இலங்கை அணிக்கே வெற்றி என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க, இங்கிலாந்து அணியின் பார்ட் டைம் ஸ்பின்னர் வில் ஜாக்ஸுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் கேப்டன் ஷனகா 2 சிக்சர்கள் 1 பவுண்டரி அடிக்க நம்பிக்கை பிறந்தது. ஆனால் 30 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேற, 16.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி சொந்தமண்ணில் 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 12வது தோல்வியை பதிவுசெய்தது இலங்கை அணி.

