சூப்பர் 8| சோபிக்காத பட்லர்.. மோசமாக விளையாடிய இங்கிலாந்து.. இலங்கைக்கு 147 ரன்கள் இலக்கு!
2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்து அணி 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பிலிப் சால்ட் 62 ரன்கள் அடித்து அசத்தினார். இலங்கை அணி, தங்களுடைய சுழற்பந்துவீச்சால் இங்கிலாந்தை திணறடித்தது. இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 14 பந்தில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பல பரபரப்பான ஆட்டங்களை பார்த்து வருகிறது. ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது. மேலும் 2026 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது.
லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் சூப்பர் 8 போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
146 ரன்கள் அடித்த இங்கிலாந்து..
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சொந்த மண்ணில் ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்தும் இலங்கை அணி, தங்களுடைய சுழற்பந்துவீச்சால் இங்கிலாந்தை திணறடித்தது.
வழக்கம் போல ஜோஸ் பட்லர் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 14 பந்தில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அடுத்தடுத்து வந்த பெத்தல் 3, டாம் பெண்டன் 6, ப்ரூக் 14, சாம் கரன் 11 ரன்கள் என அவுட்டாகி வெளியேற, ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் 40 பந்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 62 ரன்கள் அடித்து அசத்தினார். பிலிப் சால்ட்டின் அதிரடி ஆட்டத்தால் போராடும் அளவிலான ஒரு இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

