தொடர்ந்து சொதப்பும் இலங்கை அணி... அமைச்சரவை துணைக்குழு நியமித்த அரசு

இலங்கை கிரிக்கெட்டில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து சரிசெய்வதற்காக அமைச்சரவை துணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
srilanka
srilankapt web

இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே சரிந்துள்ளது. ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 20 ஓவர் போட்டிகளில் 8 ஆவது இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் 7 ஆவது இடத்திலும், டெஸ்ட் போட்டிகளில் 7 ஆவது இடத்திலும் உள்ளது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் கூட 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து சரிசெய்வதற்காக அமைச்சரவை துணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தலைமையில் எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மனுஷா நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரான் அலேஸ் ஆகியோர் துணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜனாதிபதியின் கூடுதல் செயலாளர், இந்த துணைக்குழுவின் செயலாளராகவும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவது, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் முறைகேடு புகார், வீரர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆராய்ந்து அவற்றை களைவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்.

தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் உட்பட கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்க தலைமையிலான புதிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com