WTC ஃபைனல் நம்பிக்கையை உயர்த்தும் SA.. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்று அசத்தல்!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது முதலில் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், முதலிரண்டு டி20 போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என தொடரை சீல் செய்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
206 ரன்கள் குவித்தும் தோற்ற பாகிஸ்தான்..
நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சையிம் ஆயுப்பின் 98 ரன்கள் என்ற அபாரமான பேட்டிங்கால் 206 ரன்கள் குவித்தது.
ஆனால், மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரீஷா ஹென்ரிக்ஸ் 63 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அசத்த, 19.3 ஓவரில் 210 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தென்னாப்பிரிக்கா.
இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
WTC ஃபைனல் நம்பிக்கையை உயர்த்தும் SA..
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 10 போட்டிகளில் ஆறில் வெற்றிபெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 63.33 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்னும் பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, டெஸ்ட் தொடருக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஒருவேளை தென்னாப்பிரிக்காவின் இறுதிப்போட்டி தகுதி உறுதிசெய்யப்பட்டால், இந்திய அணி கட்டாயம் ஆஸ்திரேலியா அணியை 3-1 என வீழ்த்த வேண்டும். எந்த 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற பரபரப்பான சூழல் எட்டியுள்ளது.