IND vs AUS டெஸ்ட் | 2 மாற்றம் செய்த இந்திய அணி.. முதல் நாள் ஆட்டம் மழையால் தடை!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் படுதோல்வியுடன் சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று தரமான கம்பேக் கொடுத்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை அசால்ட்டாக வென்ற ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கியது.
இந்திய அணி செய்த 2 மாற்றம்.. மழையால் ஆட்டம் தடை!
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் இடம்பெற்றிருந்த அஸ்வின் மற்றும் ஹர்சித் ரானா இருவரும் நீக்கப்பட்டு ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர். கடைசி நேரத்தில் பேட்டிங்கில் ரன்கள் வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 18 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டம் 6 ஓவர்களை கடந்தபோது மீண்டும் அதிக மழைப்பொழிவால் ஆட்டம் தடைபட்ட நிலையில், முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முதல்நாள் முடிவில் 13.2 ஓவர்கள் வீசப்பட்டு 28/0 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி நீடிக்கிறது.