இலங்கையை 2-0 என ஒயிட்வாஷ் செய்த தென்.ஆப்ரிக்கா.. WTC புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 42 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா அணி, 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது க்கெபெர்ஹா மைதானத்தில் நடைபெற்ற நிலையில், கடைசி நாளான இன்று 109 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
2-0 என தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா..
டிசம்பர் 5ம் தேதி க்கெபெர்ஹா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 358 ரன்களும், இலங்கை 328 ரன்களும் அடித்தன.
30 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 317 ரன்கள் சேர்த்தது.
இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் 348 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இக்கட்டான நிலைக்கு சென்றது.
போட்டியானது ஐந்தாம் நாளுக்கு சென்ற நிலையில், கடைசி முழுமையான பேட்டர்கள் இணையாக கேப்டன் டி சில்வா மற்றும் குசால் மெண்டீஸ் இருவரும் களத்தில் இருந்தனர். ஆனால் கடைசி நாளின் தொடக்கத்திலேயே குசால் மெண்டீஸை வெளியேற்றி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய கேசவ் மஹாராஜ், இலங்கையை நம்பிக்கையை உடைத்தார்.
முடிவில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. தென்னாப்பிரிக்கா அணியில் கேசவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டிலுமே வென்ற தென்னாப்பிரிக்கா இலங்கையை 2-0 என ஒயிட்வாஷ் செய்தது.
WTC புள்ளி பட்டியலில் முதலிடம்..
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா அணி, 63.33 புள்ளிகள் பெற்று WTC புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (60.71), மூன்றாவது இடத்தில் இந்தியாவும் (57.29) இடம்பெற்றுள்ளன.
இன்னும் தென்னாப்பிரிக்காவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஹோம் டெஸ்ட்டுகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வேண்டுமென்றால் அந்த 2 போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமிருக்கும் 3 போட்டிகளையும் வெல்ல வேண்டும்.