U19 ஆசியக்கோப்பை ஃபைனல்: இந்தியாவை ஊதித்தள்ளிய வங்கதேசம்.. தொடர்ந்து 2வது கோப்பை வென்று சாதனை!
11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், தலா 4 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின.
இதில், பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணியும், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில் இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்ற வங்கதேசம்..
விறுவிறுப்பாக நடைபெற்ற யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவரில் 198 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
அதற்குபிறகு விளையாடிய இந்திய அணி எப்படியும் எளிதாக இலக்கை எட்டிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில், கடந்த போட்டிகளில் சதமடித்த அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே ஆட்டம் வங்கதேசம் பக்கம் சென்றது. மேலும் மேலும் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தம் போட்ட வங்கதேச பவுலர்கள் இந்திய அணியை 139 ரன்களுக்கே ஆல் அவுட் செய்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.
இது வங்கதேசத்துக்கு இரண்டாவது ஆசியக்கோப்பை வெற்றியாகும், கடந்த 2023-ம் ஆண்டு யு19 ஆசியக்கோப்பை வென்றிருந்த வங்கதேச அணி தொடர்ச்சியாக 2வது முறையாக 2024 யு19 ஆசியக்கோப்பையும் வென்று அசத்தியுள்ளது.