"நான் விரும்புவது ஒன்றுதான்...” - திருமணத் தடைக்குப் பிறகு ஸ்மிருதி ஆற்றிய எதிர்வினை!
“தாம் கிரிக்கெட்டைவிட வேறு எதையும் நேசிக்கவில்லை” என இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசைக்கலைஞர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருணம் நடைபெற இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன், பலாஷ் முச்சலுக்கும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, திருமண சடங்குகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்த நீக்கத்திற்கு, பலாஷ் முச்சல் பற்றிய பழைய காதல் வதந்திகள்தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்மிருதி, ”திருமணம் நின்றுவிட்டது என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இத்துடன் இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
பலாஷ் முச்சலும் அதை உறுதிப்படுத்தினார். அதேநேரத்தில், ”இந்த வதந்தி தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, டிசம்பர் 21 முதல் 30 வரை இந்திய அணி, இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் ஸ்மிருதி மந்தனா களமிறங்க உள்ளார். அதற்கான பயிற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், ”நான் கிரிக்கெட்டைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை” என ஸ்மிருதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் கிரிக்கெட்டைவிட வேறு எதையும் நேசிக்கிறேன் என்று நினைக்கவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் என்னை இயக்கும் உந்து சக்தியாகும். நீங்கள் உங்கள் எல்லா பிரச்னைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டாலே, அந்த எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.

