”முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்..” - திருமணம் குறித்த பேச்சுக்கு ஸ்மிருதி மந்தனா பதில்!
”திருமணம் குறித்த பேச்சுகளுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” என இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசைக்கலைஞர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருணம் நடைபெற இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன், பலாஷ் முச்சலுக்கும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, திருமண சடங்குகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்த நீக்கத்திற்கு, பலாஷ் முச்சல் பற்றிய பழைய காதல் வதந்திகள்தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதாவது, பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாகப் பரவின. முச்சலின் துரோகம்தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. ஆனால், அதை பலாஷின் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்திருந்தார். இருப்பினும், ஸ்மிருதியோ அல்லது பலாஷோ இதுகுறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இதற்கிடையே ஸ்மிருதிக்கு ஆதரவளிக்கும் வகையில், அவருடைய நெருங்கிய தோழியும் கிரிக்கெட் வீராங்கனையுமான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2025 மகளிர் பிக் பாஷ் லீக் சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். மறுபுறம், திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின் ஸ்மிருதி மந்தனா, விளம்பர வீடியோ மூலம் சோஷியல் மீடியாவுக்குள் மீண்டும் நுழைந்தார். ஆனால், அந்த விளம்பரத்தில் ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை. இது பேசுபொருளானது. எனினும், இந்த விளம்பரம் அவரது நிச்சயதார்த்தத்திற்கு முன் படமாக்கப்பட்டதா அல்லது அதற்குப் பிறகு படமாக்கப்பட்டதா என்பது குறித்து எதுவும் முழுமையாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், தனது திருமணம் தொடர்பாக ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைச் சுற்றி பல வதந்திகள் உலா வருகின்றன. இந்த நேரத்தில் இதுகுறித்துப் பேசுவது முக்கியம் என்று கருதுகிறேன். நான் எனது தனிப்பட்ட விஷயங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத நபர் (Private person). அதை அப்படியே வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். ஆனால், திருமணம் நின்றுவிட்டது என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இத்துடன் இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். முடிந்தவரை இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடி பல கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன்; என் கவனம் எப்போதும் அதிலேயே இருக்கும்" என அதில் பதிவிட்டுள்ளார்.
ஸ்மிருதிக்குப் பிறகு பலாஷ் பகிர்ந்துள்ள பதிவில், “ஆதாரமற்ற வதந்திகளுக்கு மக்கள் இவ்வளவு எளிதாக எதிர்வினையாற்றுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது என் வாழ்க்கையின் மிகவும் கடினமான கட்டம். நாங்கள் இந்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கும்போது, உலகில் பலர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கத்தைப் பரப்புபவர்களுக்கு எதிராக எனது குழு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்னொரு புறம் ஸ்மிருதி - பலாஷின் புதிய திருமண தேதி குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில் அதை, ஸ்மிருதியின் சகோதரர் ஷ்ரவன் மறுத்துள்ளார். இதற்கிடையே, டிசம்பர் 21 முதல் 30 வரை இந்தியா இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் ஸ்மிருதி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகள் விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்றன. ஆகையால், இத்தொடரில் கவனம் செலுத்தும் விதமாக அதற்கான பயிற்சிகளில் ஸ்மிருதி ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நவி மும்பையில் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் ஸ்மிருதி வழிநடத்த உள்ளார்.

