உலக சாதனைக்கு 3 சதங்களே மீதம்.. 12வது ODI சதம் விளாசினார் மந்தனா!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா..
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை 44.1 ஓவரிலேயே எட்டி வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. 4 கேட்ச்களை கோட்டைவிட்ட இந்திய ஃபீல்டர்கள் போட்டியை ஆஸ்திரேலியாவிற்கு எளிதாக விட்டுக்கொடுத்தனர்.
ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், இந்திய மகளிர் அணியின் இந்த செயல்பாடு மோசமான விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது.
இந்தசூழலில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே இன்று நியூ சண்டிகரில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கி 14 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 117 ரன்கள் குவித்து அசத்தினார்.
77 பந்தில் சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா இந்தியாவிற்காக இரண்டாவது அதிவேக சதமடித்து மிரட்டினார். உடன் 12 ஒருநாள் சதங்கள், 2 டெஸ்ட் சதங்கள், 1 டி20 சதம் என மொத்தம் 15 சர்வதேச சதங்களை எட்டியிருக்கும் ஸ்மிரிதி இச்சாதனையை படைத்த முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் லானிங் (15), நியூசிலாந்தின் வில்சன் பாட்ஸ் (13) போன்ற வீரர்களுக்கு பிறகு 12 சதங்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார் ஸ்மிரிதி மந்தனா. தொடர்ந்து சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திவரும் ஸ்மிரிதி 2025 ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்து உலக சாதனையை எட்டுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2023 உலகக்கோப்பையில் விராட் கோலி ஆடவர் கிரிக்கெட்டில் அந்த சாதனையை படைத்த நிலையில், 2025 உலகக்கோப்பையில் ஸ்மிரிதி படைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.