
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் டாமினேட் செய்த இந்திய அணி, 3-0 என வென்று தொடரை கைப்பற்றியது.
இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் 80 ரன்கள், ஷபாலி வெர்மாவின் 79 ரன்கள் ஆட்டத்தால் 221 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை மகளிர் அணியும் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடியது. 20 ஓவரில் 191 ரன்கள் அடித்த இலங்கை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஒரே போட்டியில் 4 சாதனைகள் படைக்கப்பட்டன, அவற்றை பார்க்கலாம்..
இந்திய சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனையாக வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா. இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 3 சிக்சர்கள் அடித்த அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 80 சிக்சர்களுடன் இந்திய வீராங்கனையாக முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தில் 78 சிக்சர்களுடன் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் நீடிக்கிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்தது இந்திய அணி. நேற்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக 20 ஓவரில் 221/2 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்திய அணிக்கு எதிரான வலுவான எதிர்ப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி, அவர்களுடைய சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச டோட்டலாக 191/6 ரன்களை பதிவுசெய்தது.
இரண்டு அணிகளும் மொத்தமாக சேர்ந்து 412 ரன்களை பதிவுசெய்தன. இது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒருவீரர் கூட சதமடிக்கமால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக பதிவுசெய்யப்பட்டது.