சிராஜ் எனும் ’தீ’ரன்.. வெளிநாட்டு மண்ணில் 800 ஓவர்கள்.. 5 மடங்கு விக்கெட்டுகள்!
சிராஜ் எப்போதும் துணை பவுலராகவே பார்க்கப்படுகிறார், ஆனால் பல முக்கியமான மேட்ச்களில் ஆபத்பாந்தவனாக மாறி இந்தியாவை தனியாளாக மீட்டு எடுத்துவந்த பெருமை அவரை சாரும். அப்போதெல்லாம் தான் ஒரு சைடு பவுலர் இல்லை, நானும் இந்திய அணியின் முன்னணி பவுலர்தான் என்று சிராஜ் பறைசாற்றியுள்ளார்.
இதை இந்திய அணி மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களும் தற்போது தான் புரிந்துகொண்டுள்ளனர். இணையத்தில் முகமது சிராஜ் குறித்த பாராட்டு பதிவுகள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இப்படி ஒரு Unsung Hero-வாக இருந்துவரும் சிராஜ், நடப்பு இங்கிலாந்து தொடரில் அதிக விக்கெட்டுகள் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக பென் ஸ்டோக்ஸை பின்னுக்கு தள்ளி மாறியுள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் 800 ஓவர்கள்..
நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 9 இன்னிங்ஸில் பந்துவீசியிருக்கும் முகமது சிராஜ் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் (23) வீழ்த்திய பும்ராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெறுவார்.
காயத்தால் அணியின் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக பும்ரா இருந்துவரும் நிலையில், ஒருமுறை கூட காயத்தால் வெளியில் உட்காராத முகமது சிராஜ் தீரனாக இந்திய அணியை காத்துவருகிறார். இத்தனைக்கும் பும்ராவை விட சிராஜ் அதிக ஓவர்களை வீசியுள்ளார். பும்ரா 119 ஓவர்களை மட்டுமே வீசியிருக்கும் நிலையில், சிராஜ் 155 ஓவர்களை வீசி சிறந்த ஃபிட்னஸ் உடன் விளையாடி வருகிறார்.
கடந்த ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் கூட 157 ஓவர்களை சிராஜ் வீசியிருந்த நிலையில், பும்ரா 151 ஓவர்களையே வீசியிருந்தார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 41 டெஸ்ட்களில் விளையாடியிருக்கும் சிராஜ், வெளிநாட்டு மண்ணில் 27 டெஸ்ட்களில் விளையாடி 841 ஓவர்களை வீசியுள்ளார். இது சொந்த மண்ணில் வீசியதை விட 4 மடங்கு அதிக ஓவர்களாகும். ஆனால் ஒருமுறை கூட காயத்தால் வெளியில் அமர்ந்ததில்லை. சொந்த மண்ணில் 19 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கும் சிராஜ், வெளிநாட்டு மண்ணில் 5 மடங்கு அதிகமாக 99 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணி பலமுறை கைவிட்ட போதும், இந்தியாவை கைவிடாமல் காத்துநிற்கும் சிராஜ் ஒரு தீரனாக மிளிர்கிறார்..