\
Shubman Gill smashes double century Vs WI and india won series
சுப்மன் கில்BCCI/ X page

'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் WI-ஐ அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை இருப்பதுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அபார வெற்றிபெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 405 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணி 43.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்தார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று குவகாத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்தது. குறிப்பாக, அவ்வணியில் ஜான் கேம்பெல் (101), ஹோப் (104), ஜாங்கோ (114) ஆகியோர் சதமடித்து அசத்தினர். பின்னர், கடுமையான இலக்கை நோக்கி இந்திய அணி இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும், தற்போதைய கேப்டன் சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். குறிப்பாக, இருவரும் ஏதுவான பந்துகளைப் பவுண்டரி எல்லைக்கு விரட்டியபடியே இருந்தனர். அதிலும் அவர்கள் வீசிய ஃப்ரீஹிட் பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியாக மாற்றி ரன் மழை பொழிந்தனர்.

இதனால் ரன்ரேட் உயர்ந்ததுடன் இருவரும் சதடித்தும் அசத்தினர். 62 பந்துகளில் சதம் கண்ட சுப்மன் கில் தொடர்ந்தும் அதிரடியில் ஈடுபட்டார்.

Shubman Gill smashes double century Vs WI and india won series
ODI-ஐ மறந்து T20 ஆடிய கேம்பெல்.. இந்திய பவுலர்களைத் திணறடித்த WI வீரர்கள்.. இமாலய ரன் குவிப்பு!

அதேநேரத்தில், 72 பந்துகளில் 35ஆவது ஒருநாள் சதம் கண்ட ரோகித் சர்மா, அடுத்த சில நிமிடங்களிலேயே வெளியேறினார். கடந்த போட்டியில் சதம் கண்ட விராட் கோலி இந்த போட்டியிலும் ஜொலிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 29 ரன்களில் ரசிகர்களை ஏமாற்றினார். அவர் வெளியேறிய நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட் கில்லுடன் இணைந்தார். அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சுப்மன் கில் ருத்ர தாண்டவமாடியதுடன், தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை அடித்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர், இந்திய அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 43.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 406 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்கின் கில் ஆட்டமிழக்காமல் 223 ரன்கள் எடுத்தார். அதில் 26 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடக்கம். ருத்ராஜ் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை இருப்பதுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்..

* ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்குகளில் (405) இன்றைய ஸ்கோரும் பதிவானது.

* ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பட்டியலில் சுப்மன் கில் (223*) 3ஆவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் ரோகித் சர்மா (264), குப்தில் (237*) உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் அதிகபட்ச மொத்த ரன்கள், அதாவது இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 811 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

* ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராகத் தொடர்ந்து அதிக இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்ற சாதனை படைத்த அணிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 14 முறை வென்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com