ODI-ஐ மறந்து T20 ஆடிய கேம்பெல்.. இந்திய பவுலர்களைத் திணறடித்த WI வீரர்கள்.. இமாலய ரன் குவிப்பு!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில், இமாலய ரன்களைக் குவித்துள்ளது. அவ்வணியின் மூன்று வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர். அவர்களின் அதிரடியால், அவ்வணி 50 ஓவர்களில் 405 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. விராட் கோலி அபார சதமடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தார். இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று குவகாத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த அவ்வணியில், தொடக்க வீரர்களாக ஜான் கேம்பெலும் கெக்கி கார்டியும் களமிறங்கினர். இதில் கார்டி 9 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் கேம்பெல் சூறாவளியாய் சுழன்றடித்தார்.
அவர் ஆடிய விதத்தைப் பார்த்தபோது, அது 50 ஓவர் போட்டியா அல்லது 20 ஓவர் போட்டியா என்றே தெரியாத அளவிற்கு இருந்தது. ருத்ர தாண்டவம் ஆடிய அவர், இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்ததுடன், 18 ஓவர்களிலேயே சதத்தை முடித்தார்.
முக்கியமாக, அவரது அதிரடியில் ஆகிப் நபி 3 ஓவர்களில் 35 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 35 ரன்களையும் குர்னூர் பிரார் 2 ஓவர்களில் 19 ரன்களையும் வாரி வழங்கினர். அவர்கள் வீசிய மோசமான ஷார்ட் பந்துகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட கேம்ப்பெல், அதை பவுண்டரி எல்லைக்கு விரட்டியதுடன், வெறும் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து, தனது அதிரடியை நிறுத்தாத கேம்ப்பெல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவின் சுழலையும் விட்டுவைக்கவில்லை. 65 பந்துகளில் சதமடித்த அவர், இந்தியாவுக்கு எதிராக தனது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற 27 ஆண்டுகால சாதனையை கேம்ப்பெல் படைத்தார்.
இதற்குமுன் 1999இல் ரிக்கார்டோ பவல் 72 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட 5வது அதிவேக சதமாகவும் இது பதிவாகியுள்ளது. இறுதியில் அவர், 101 ரன்களில் வெளியேறினார். இதில் 9 பவுண்டரிகௌம், 5 சிக்ஸர்களும் அடக்கம். அவர் வெளியேறிய நிலையிலும் வெஸ்ட் அணியின் அதிரடி கொஞ்சமும் குறையவில்லை. ஒருமுனையில் கேப்டன் ஷாய் ஹோப்பும், மறுமுனையில் அமிர் ஜான்கோவும் நங்கூரமாய் நின்று இருவரும் சதமடித்தனர். மொத்தத்தில் இன்றைய போட்டியில் மூன்று வீரர்கள் சதமடித்து அசத்தியதுடன், அவ்வணி பெரிய இலக்கை எட்டவும் துணை புரிந்தனர். ஹோப் 104 ரன்களிலும், ஜாங்கோ 114 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்துள்ளது.

