காதலியை மணக்கப் போகும் ஷிகர் தவான்.. ஏற்பாடுகள் தீவிரம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான், தனது காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக விளையாடி அணிக்கு பெருமை சேர்த்துக்கொடுத்து பல சாதனைகளை படைத்தவர் ஷிகர் தவான். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். தொடர்ந்து, அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். எனினும், ஓய்வுக்குப் பிறகு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார். மறுபுறம், தவானின் கிரிக்கெட் பயணம் தடைப்பட்டதற்கு அவருடைய குடும்ப வாழ்க்கையும் ஒரு காரணமாக இருந்தது. ஷிகர் தவான், ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜோராவர் என்ற குழந்தை உள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்தே அவருடைய கிரிக்கெட் பயணமும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஷிகர் தவான் விவாகரத்து கோரி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். அதன் விசாரணையில் கடந்த (2023) அக்டோபர் மாதம் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இவருடைய மகன் ஜோராவர் மற்றும் ஆயிஷா முகர்ஜி ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். எனினும், தன்னுடைய மகனைப் பார்க்க முடியாமல் தவிப்பதாக, அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையே ஷிகர் தவான் மீண்டும் காதலில் விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதை அவரே உறுதிப்படுத்தியும் இருந்தார். அபுதாபியில் பணியாற்றும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோபி ஷைன் என்ற பெண்ணைக் காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களும் இணையத்தில் வெளியாகின. இந்த நிலையில் ஷிகர் தவான், தனது காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணம் டெல்லி NCR பகுதியில் ஆடம்பரமாக நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் (பிப்ரவரி) மூன்றாவது வாரத்தில் டெல்லி-என்சிஆரில் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ஆகிய இரு துறைகளைச் சேர்ந்த பெரிய நட்சத்திரங்கள் இதில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும், இருப்பினும் அதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த சோஃபி ஷைன்?
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைன், அந்நாட்டில் உள்ள கேஸ்ட்லெராய் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், லிமெரிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்றார். தற்போது அபுதாபியில் வசித்து வரும் அவர், உலகளாவிய நிதிச் சேவை நிறுவனமான நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷனில் மூத்த தயாரிப்பு ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் சோஃபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது தொழில் வாழ்க்கை, பயணங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் ஷிகர் தவான் அறக்கட்டளையையும் வழிநடத்தி வருகிறார்; இது தவானின் விளையாட்டு தொடர்பான முயற்சிகளுடன் தொடர்புடைய தொண்டுப் பணிகளுக்கு ஆதரவளிக்கிறது. ஷிகர் தவானும் சோஃபி ஷைனும் பல வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஓர் உணவகத்தில் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறாது. இந்த ஜோடி ஆரம்பத்தில் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்தது. ஆனால் 2025இல் பொதுவில் காட்சிகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியது.

