2011 உலகக்கோப்பை: அரையிறுதியில் சதத்தைத் தவறவிட்ட சச்சின்.. தற்போது விளக்கம் அளித்த சேவாக்!
2011-ம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி, மீண்டும் நாட்டுக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தது. அதன் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மாஸ்டர் பேட்டரான சச்சின் டெண்டுல்கர் சதம் அடிக்கத் தவறினார். அவர் 85 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் சச்சின் மற்றும் சேவாக் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த சிரிப்புக்கு பின்னணி என்ன, இந்தப் போட்டியில் சச்சின் சதம் அடிக்க தவறியது ஏன் என்பது குறித்து, நீண்டநாளைக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் தனது சமீபத்திய பேட்டியில், “அந்தநேரத்தில் சச்சினும் நானும் சிரித்தபடி கடந்தோம். அப்போது ‘நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’ என சச்சின் என்னிடம் கூறினார். நான், ‘ஏன்’ என்று கேட்டேன். அதற்கு அவர், ’நான் சதம் அடிப்பதற்கு முன்பே அவுட் ஆனது நல்லது’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ’நான் சதம் அடித்திருந்தால் அணி தோல்வி அடைந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்’ என என்னிடம் கூறினார்.
அதற்கு நான் அவரிடம், ’என் இதயத்தில் உள்ளதை நீங்கள் எவ்வாறு கூறினீர்கள்? நீங்கள் இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்துள்ளீர்கள். அதில், ஒன்றில் நாம் தோல்வியடைந்தோம். மற்றொன்று சமன் ஆனது’ என்றேன்.
கடவுளுக்கு நன்றி. அவர் அந்தப்போட்டியில் சதம் அடிக்கவில்லை, அதனால் நம்மால் உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார் சிரித்தபடியே.
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதுடன், உலகக்கோப்பையையும் மீண்டும் உச்சி முகர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... உலகக்கோப்பை: ஒரே போட்டியில் இலங்கை அணி 6 சாதனைகள்!