சச்சினின் அந்த இன்னிங்ஸை, இந்தியாவின் அந்த வெற்றியை யாரால் மறக்க முடியும்! வேர்ல்ட் கப் மெமரீஸ் -10

இந்த எபிசோடில் நாம் பார்க்கப்போவது யாராலும் மறக்க முடியாத 2003 இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை. உலகின் அச்சுறுத்தலான பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட அக்தரை அந்த மேட்ச்சில் அநாயசமாக அடித்து ஆடினார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின்
சச்சின்pt web

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.

இந்த எபிசோடில் நாம் பார்க்கப்போவது யாராலும் மறக்க முடியாத 2003 இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை.

அரசியல் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் நெடுங்காலம் எந்தப் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தன. பைலேட்டரல் தொடர்களில் விளையாட இந்தியா தயாராக இல்லாததால், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற தொடர்கள்தான் அந்த பெரும் ரைவல்ரியைப் பார்ப்பதற்கான ஒரே வாய்ப்பாக இருந்தது. அந்த வாய்ப்பை 2003 உலகக் கோப்பை வழங்கியது.

சச்சின்
இளம் இன்சமாமின் அதிரடியால் 1992 அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்; வேர்ல்ட் கப் மெமரீஸ் - எபிசோட் 3

தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்த உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தன. இந்திய அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. அதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்றிருந்தது இந்தியா. அதனால் சூப்பர் 6 வாய்ப்பை ஏற்கெனவே உறுதி செய்திருந்தது. பாகிஸ்தானுக்கோ இது மிகமுக்கியமான போட்டியாக அமைந்தது. அதுவரை விளையாடியிருந்த 4 போட்டிகளில் அந்த அணி இரண்டில் மட்டுமே வென்றிருந்தது. கடைசி இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றை உறுதி செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது அந்த அணி. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்தப் போட்டி மார்ச் 1ம் தேதி செஞ்சுரியனில் நடைபெற்றது.

எதிர்பார்த்ததைப் போலவே போட்டிக்கு முன்பாகவே பல பஞ்சாயத்துகள் தொடங்கியிருந்தன. இந்திய அணியை உலகக் கோப்பையில் அதற்கு முன் பாகிஸ்தான் வென்றதில்லை என்பதால், இம்முறை அதை மாற்றுவோம் என்று சபதமிட்டனர் பாக் வீரர்கள். சவால்களும், சவடால்களும் நிறைந்த அந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாகிஸ்தான் கேப்டன் வக்கார் யூனிஸ்.

சச்சின்
2023 Worldcup:“இவர் அடிக்க ஆரம்பித்தால் நிறுத்துவது மிகவும் கடினம்”-லபுசனே கூறும் இந்திய வீரர் யார்?

இந்திய அணிக்கு எப்போதுமே எமனாக இருந்திருக்கும் சயீத் அன்வர் இந்தப் போட்டியிலும் இந்திய பௌலர்களைப் பதம் பார்க்கத் தொடங்கினார். அவர் ரொம்பவும் அதிரடியாகவெல்லாம் ஆடிடவில்லை. நிதானமாக தன் இன்னிங்ஸைக் கட்டமைத்து, தவறான பந்துகளைத் தண்டித்து ஆடினார். ஒருபக்கம் மற்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெளியேறிக்கொண்டிருந்தாலும், அன்வர் அசராமல் நின்று ஆடினார். 72 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 124 பந்துகளில் சதமும் கடந்தார். ஒருவழியாக அவரை நெஹ்ரா போல்டாக்கி வெளியேற்றினார். 126 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் அன்வர். அவர் அவுட்டானபோது 40.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். அதனால் இந்தியா அந்த அணியை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் ரஷித் லத்தீஃப், வாசிம் அக்ரம் ஆகியோர் அதிரடி காட்ட, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது பாகிஸ்தான்.

பெரும் இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு சச்சின், சேவாக் இருவரும் சேர்ந்து அசத்தலான தொடக்கம் கொடுத்தனர். 32 பந்துகளிலேயே 50 ரன்களைக் கடந்தது இந்திய அணி. ஆனால், ஆறாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் சேவாக், கங்குலி இருவரையும் வெளியேற்றி பிரேக் அடித்தார் கேப்டன் வக்கார் யூனிஸ். அடுத்து களமிறங்கிய முகமது கைஃப் மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். மறுபக்கம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எந்த பாரபட்சமும் பார்க்கமல் அதிரடி காட்டினார். சச்சினின் ஆட்டம் இந்தியாவின் ரன்ரேட்டை சிறப்பாக வைத்திருந்தது. அதனால், கைஃபுக்கு பிறகு வந்த டிராவிட்டுக்கும் அந்த ரன்ரேட் நெருக்கடி இருக்கவில்லை.

இந்தப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ரைவல்ரிக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியது சச்சின் vs ஷோயப் அக்தர் யுத்தம். உலகின் மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட அக்தரை சச்சின் எப்படி எதிர்கொள்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அக்தரை அநாயசமாக அடித்து ஆடினார் டெண்டுல்கர்.

அதிலும் அதிவேகமாக அக்தர் வீசிய பௌன்சரை சச்சின் ஊப்பர் கட் மூலம் சிக்ஸர் அடித்தது இன்று வரை ஒரு ஐகானிக் ஷாட்டாகக் கொண்டாடப்படுகிறது. தன் கரியரின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடிய சச்சின், தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இருந்தாலும் அவரது போராட்டம் ஓயவில்லை. ஒருகட்டத்தில் அவர் ஓடவே முடியாது என்ற நிலைக்கு வந்தபோது அவருக்கு பை ரன்னராக வந்தார் சேவாக். ஆனால் அதன்பிறகு சச்சினின் ஆட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த அவர், 98 ரன்களில் ஆட்டமிழ்ந்து வெளியேறினார்.

சச்சின்
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா: சச்சின் சொன்ன நெகிழ்ச்சி கருத்து!

இந்தியர்களுக்குத்தான் எப்போதுமே சச்சின் அவுட் ஆனால் பதற்றம் தொற்றிக்கொள்ளுமே, அன்றும் அதுதான் நடந்தது. இத்தனைக்கும் சச்சின் 28வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். 134 பந்துகளில் இந்திய அணிக்கு 97 ரன்கள் தேவைப்பட்டது. எங்கே ஆட்டம் கையை விட்டுப் போய்விடுமோ என்று ரசிகர்கள் பயந்திருக்க, யுவ்ராஜ் சிங் சிறப்பாக விளையாடி அப்படி ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

அதிரடியாக விளையாடிய அவர், 53 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியது இந்தியா. உலகக் கோப்பையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடிய சச்சின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் தோற்றது பாகிஸ்தான் அணியின் சூப்பர் 6 வாய்ப்பை பெருமளவு பாதித்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர்கள் ஆடிய அடுத்த போட்டி மழையால் பாதிக்கப்பட, 12 புள்ளிகள் மட்டும் பெற்று தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com