SMAT டி20| கடைசி பந்துவரை திக் திக்.. கர்நாடகாவை 1 ரன்னில் வீழ்த்தியது சௌராஷ்டிரா!
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் சௌராஷ்டிரா அணி கர்நாடகாவை 1 ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. சௌராஷ்டிரா 178 ரன்கள் சேர்த்த நிலையில், கர்நாடகா 179 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி ஓவரில் 6 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பன்வார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.. சீசனின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்..
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் உனாத்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்கொண்டு விளையாடியது..
1 ரன்னில் த்ரில் வெற்றி..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.. அதிகபட்சமாக தொடக்க வீரர் விஷ்வராஜ் ஜடேஜா 40 ரன்களும், சித்தண்ட் ராணா 42 ரன்களும் அடித்தனர். கர்நாடகாவின் வைசாக் விஜயகுமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்..
179 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய கர்நாடகா அணி 49 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாற, 3வது வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் இந்தபோட்டியிலும் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய தேவ்தத் 66 ரன்கள் அடித்து வெளியேறினார்.. அதற்குபிறகு வந்த ஸ்மரன் ரவிச்சந்திரன் 2 சிக்சர்களை பறக்கவிட எல்லாமே கர்நாடகா அணிக்கு சாதகமாகவே சென்றது..
ஆனால் அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்திய சௌராஷ்டிரா அணி தரமான கம்பேக் கொடுத்தது. இறுதி ஓவரில் கர்நாடகாவிற்கு 6 பந்துக்கு 14 ரன்கள் தேவையாக இருந்தபோது, சௌராஷ்டிரா வெற்றிபெற 1 விக்கெட் தேவையாக இருந்தது. இறுதிஓவரை பன்வார் வீசியநிலையில், முதல் 3 பந்தில் 7 ரன்கள் அடித்தது கர்நாடகா. கடைசி 3 பந்துக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தபோது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பன்வார் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சௌராஷ்டிராவுக்கு தேடிக்கொடுத்தார்..

