Timed Out முறை | ”ஒருவேளை நல்லா தூங்கிருப்பாரோ..” மோசமான சாதனை படைத்த முதல் பாக். வீரர்!
பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொண்ட சாம்பியன்ஸ் டிராபி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொடரை நடத்தும் பாகிஸ்தான், முன்னதாக இந்தியாவிடம் தோற்றதன் மூலமாக அரையிறுதி வாய்ப்பை எட்டாமலேயே வெளியேறிருந்தது. எனினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல், தற்போது மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள் தற்போது உள்நாட்டு தொடரில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற பிரசிடென்ட்ஸ் கோப்பை கிரேடு 1 முதல் தர போட்டியின் போது பாகிஸ்தான் தொலைக்காட்சி (PTV) அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) அணிக்காக சவுத் ஷகீல் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யவிருந்தார்.
உமர் அமீன் மற்றும் ஃபவாத் ஆலம் ஆகிய இருவரை பாகிஸ்தான் தொலைக்காட்சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாசாத் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து அவரின் ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள சவுத் ஷகீல் வந்தார். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 3 நிமிடத்துக்குள் சவுத் ஷகீல் களமிறங்காததால், எதிரணி அவரை ’டைம்டு அவுட்’ விதிப்படி ஆட்டமிழக்க செய்ய முறையிட்டது. அதன்படி, சவுத் ஷகீல் தாமதமாக களமிறங்கியது நடுவர்கள் உறுதிப்படுத்த அவரை தகுதி நீக்கம் செய்து அவுட் வழங்கினர். இதனால் சவுத் ஷகீல் பேட்டிங் செய்யும் வாய்ப்பை இழந்தார்.
இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ’டைம்டு அவுட்’ ஆன ஏழாவது வீரர், அதேநேரம், பாகிஸ்தானில் இருந்து முதல் வீரர் என்கிற துரதிர்ஷ்டவசமான சாதனையை சவுத் ஷகீல் பெற்றார்.
முன்னதாக, சவுத் ஷகீல் தூங்கியதன் காரணமாக, நேரம் தவறி களமிறங்கினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதனாலேயே 3 நிமிடங்கள் தாமதமாக களமிறங்க ஆடுகளத்துக்கு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. சவுத் ஷகீல் அவுட் என அறிவிக்கப்பட்ட அடுத்த பந்தில், முகமது இர்பானை அவுட்டாக்கி பாகிஸ்தான் தொலைக்காட்சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாசாத் ஹாட்ரிக் எடுத்தார். இதன்மூலம் 3 பந்தில் 4 விக்கெட்டை இழந்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அணி.
இதன்மூலம் பாகிஸ்தானின் சவுத் ஷகீல், இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுடன் 'டைம் அவுட்' செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்தார். இது, கிரிக்கெட்டில் ஓர் அரிய வகை ஆட்டமிழப்பாகும். கிரிக்கெட்டில் 10 ஆட்டமிழப்பு முறைகளில் டைம்டு அவுட் ஒன்றாகும். இது 1980 ஆம் ஆண்டு கிரிக்கெட் விதிகளில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. அதாவது, கிரிக்கெட்டில், முந்தைய பேட்டர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்குள் ஒரு புதிய பேட்டர் மைதானத்திற்குள் வர வேண்டும் அல்லது 3 நிமிடத்துக்குள் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் ’டைம்டு அவுட்’ விதிப்படி எதிரணி முறையிடும் பட்சத்தில் நடுவர்கள் அந்த பேட்ஸ்மேனை தகுதி நீக்கம் செய்ய முடியும். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தை சந்திக்க தாமதமானதால் ’டைம்டு அவுட்’ செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மேத்யூஸின் ஆட்டத்தைவிட மிகவும் விநோதமானதாக சவுத் ஷகீலின் ஆட்டம் கருதப்படுகிறது.