யாரும் படைக்காத சாதனை.. இருந்தும் புறக்கணிக்கப்படும் தமிழக வீரர்.. வடஇந்திய மாஃபியா காரணமா?
தமிழ்நாட்டின் இளம் வீரரான சாய் சுதர்சன் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2022-ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஐபிஎல் தொடரில் ஆட தேர்வு செய்தது. அந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாகக் களம் இறங்கிய சாய் சுதர்சன், 5 போட்டிகளில் 1 அரைசதம் உள்ளிட்ட 145 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அவர் அந்த அணியால் தக்கவைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு 8 போட்டிகளில் 51.71 என்ற சராசரியுடன் 362 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் அந்த அணியின் தூணாக மாறிய சாய் சுதர்சன் அடுத்த மூன்று சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார்.
அதிலும் கடந்த சீசனில் 759 ரன்கள் குவித்து 58.38 என்ற அசுர சராசரியோடு ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதே போல நடப்பு சீஸனின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பின் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை விளாசி இந்த சீசனிலும் 700 ரன்களை கடந்து ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் உள்ளார்.
அதோடு ஒட்டுமொத்தமாக மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் அதாவது 25 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர், தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் சதம் விளாசிய முதல் இந்திய பேட்டர் போன்ற பல்வேறு சாதனைகளையும் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
ஆனாலும், இந்தியாவை சேர்ந்த பல்வேறு விளையாட்டு நிபுணர்களும் அவரை பாராட்டுவதற்கு பதிலாக சாய் சுதர்சன் மெதுவாக ஆடுகிறார் என்று அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இத்தனைக்கும் இந்த ஐபிஎல் தொடரில் டி20 ஜாம்பவான்களான ஜோஸ் பட்லர், கிளாசன், மிச்சேல் மார்ஷ் ஆகியோருக்கு இணையாக 160 strike rate என்ற வகையில் சிறப்பாகவே சாய் சுதர்சன் ஆடியுள்ளார். அதோடு அவரின் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுவந்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.
மேலும் இந்த தொடரில் சூர்யவன்ஷிக்கு பிறகு 700 ரன்களை தாண்டிய இரண்டாவது வீரரும் அவர்தான். அப்படிப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் பாராட்டுக்கு பதில் விமர்சனத்தை சந்தித்து வருவதற்கு அவர் தென்னிந்தியாவை சேர்ந்த வீரர் என்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே இந்திய அணியில் வடஇந்திய வீரர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் எதுவும் தென்னிந்திய வீரர்களுக்கு கிடைக்காது. அதன் தொடர்ச்சியாகவே பல்வேறு சாதனைகளை படைத்தும் சாய் சுதர்சன் விமர்சிக்கப்பட்டுவருகிறார் என்றே பார்க்கப்படுகிறது.

