மருத்துவம் To சமூக சேவை - 'சச்சின் டெண்டுல்கர்' அறக்கட்டளையின் இயக்குநராக மகள் சாரா பொறுப்பேற்பு!
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ‘சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை’ ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்ட விசயங்களை செயல்படுத்திவருகிறார். அறக்கட்டளையின் துணை நிறுவனராக சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இருக்கும் நிலையில், அவருடைய மகளும் தற்போது அறக்கட்டளையில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய மகளான சாராவும் மருத்துவத்தை பின் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர், அவருடைய மகள் சாரா சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த சிறப்பு பதிவு..
தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர், “எனது மகள் சாரா டெண்டுல்கர் ’சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின்’ இயக்குநராக சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவ மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை அவர் தொடங்குகிறார்" என்று சச்சின் X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையுடன் சேர்ந்து பயணித்திருந்த சாரா, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், உதய்பூருக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் அடிப்படை சுகாதார சேவைகள் (basic healthcare services) இயக்கம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை உடன் நேரத்தை செலவிடுவது அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதற்காக கிளினிக்குகளை அமைத்து, இளம் குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
எல்லாவற்றையும் கடந்து என்னை அதிகப்படியாக கவர்ந்தது, கிராமத்திலிருக்கும் பெண்கள் தங்களுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எப்படி தங்களை தகவமைக்கின்றனர் என்பது முன்னுதாரணமாகவும், இன்ஸ்பைரிங்காகவும் இருந்தது. சிறிய மாற்றம் கூட எப்படி ஒரு சிற்றலையை உருவாக்கி, ஒட்டுமொத்த கிராமத்தையும் பலப்படுத்தும் என்பதை உணர்த்தி என்னை சிந்திக்க வைத்தது” என்று பதிவிட்டிருந்தார்.