இந்திய அணிக்கு கேப்டனாகும் ருதுராஜ்; பிசிசிஐ வெளியிட்ட அட்டகாச அறிவிப்பு
வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் ஹாங்சோவ் நகரில் நடைபெற உள்ளது. இதில் இம்முறை கிரிக்கெட் போட்டிகளும் விளையாடப்பட உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஐசிசியின் வரம்பிற்குள் வராத காரணத்தால் இவை சர்வதேச கிரிக்கெட்டில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளாக அங்கீகரிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை நடக்கவுள்ள நிலையில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த ரிங்கு சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி, “ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்” ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாற்று வீரர்களாக, “யாஷ் தாக்குர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா” ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய போட்டிகளுக்கான பெண்கள் அணியில், “ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி” ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.