’இதுக்கு இல்லையா சார் ஒரு END..’ தொடர்ந்து 13வது முறையாக தோற்ற இந்தியா! ரோகித் மோசமான சாதனை!
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் போடுவதற்கான அழைப்பை ரோகித் சர்மா தவறாக சொல்ல, டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இந்த போட்டியில் ரோகித் சர்மா டாஸ்ஸை இழந்ததோடு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் டாஸ் தோற்ற அணியாக இந்தியா முதலிடம் பிடித்ததுடன், ’இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.
ரோகித் சர்மா மோசமான சாதனை..
இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முக்கியமான போட்டிகளில் டாஸ் வெல்லமால், அதிர்ஷ்டமற்ற கேப்டனாகவே பார்க்கப்பட்டார். டாஸ்ஸை இழப்பது போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருந்தது. பின்னர் ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி சென்றபிறகு முக்கியமான போட்டிகளில் ரோகித் சர்மா டாஸ்ஸை வென்று அதிர்ஷ்டமான கேப்டனாக வலம்வந்தார்.
ஆனால் தற்போது வரிசையாக 10 முறை டாஸ்ஸை இழந்திருக்கும் ரோகித் சர்மா, தொடர்ச்சியாக அதிகமுறை டாஸ்ஸை இழந்த இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்துள்ளார்.
ரோகித் சர்மாவின் இந்த அன்லக்கி ஸ்ட்ரீக் உடன் இந்திய அணி தொடர்ச்சியாக 13 முறை டாஸ்களை இழந்து நெதர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
ODI கிரிக்கெட்டில் அதிகமுறை டாஸ் இழந்த அணி..
1. இந்தியா - 13* - நவம்பர் 2023 முதல் மார்ச் 2025
2. நெதர்லாந்து - 11 - மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013
3. இங்கிலாந்து - 9 - ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 2023
ODI அதிகமுறை டாஸ் இழந்த கேப்டன்:
1. பிரையன் லாரா - 12 - அக்டோபர் 1998 முதல் மே 1999
2. பீட்டர் போரன் - 11 - மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013
3. ரோகித் சர்மா - 10* - நவம்பர் 2023 முதல் மார்ச் 2025