ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தடுமாறிய இடத்தில் பட்டையைக் கிளப்பிய ஹிட்மேன் ரோஹித்..!

ஒரு பேட்ஸ்மேனின் சராசரி ஸ்டிரைக் ரேட் - 70.3. இப்படியான ஆடுகளத்தில் ஒரேயொரு அரை சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் 86.13 என்ற அட்டகாசமான ஸ்டிரைக் ரேட்டிலும் ஆடிய ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
 Rohit Sharma
Rohit SharmaPTI
போட்டி 29: இந்தியா vs இங்கிலாந்து
முடிவு: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (இந்தியா 229/9; இங்கிலாந்து - 129 ஆல் அவுட், 34.5 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ரோஹித் ஷர்மா (இந்தியா)
பேட்டிங்: 101 பந்துகளில் 87 ரன்கள் (10 ஃபோர்கள் & 3 சிக்ஸர்கள்)

ரோஹித் இன்னிங்ஸின் அருமை புரிய ஒட்டுமொத்த ஆட்டத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இது இந்தப் போட்டியில் சில முக்கிய பௌலர்களின் செயல்பாடுகள்:

 Jasprit Bumrah | Mohammed Shami
Jasprit Bumrah | Mohammed Shami

ஜஸ்ப்ரித் பும்ரா: 6.5-1-32-3
முகமது ஷமி: 7-2-22-4
குல்தீப் யாதவ்: 8-0-24-2
டேவிட் வில்லி: 10-2-45-3
கிறிஸ் வோக்ஸ்: 9-1-33-2
ஆதில் ரஷீத்: 10-0-35-2

இப்படி பெரும்பாலான பௌலர்கள் லக்னோவில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். 85 ஓவர்களில், 9 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டன. 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அந்த அளவுக்கு பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது லக்னோ ஆடுகளம். ஒரு சமயம் பெரிய பௌன்ஸ் இருக்காது. திடீரென நன்கு பௌன்ஸ் ஆகும். ஒரு பந்து எதிர்பார்த்த வேகத்தில் வரும். இன்னொரு பந்து நின்று மெதுவாக வரும். இப்படி கொஞ்சம் கூட கணிக்க முடியாத ஒரு சிக்கலான ஆடுகளத்தில் தான் இவ்விரு அணிகள் ஆடின. அதனால் பெரும் அனுபவம் கொண்ட பேட்டர்கள் கூட ரன் அடிக்கத் தடுமாறினார்கள். இந்தப் போட்டியில் மொத்தமாக அடிக்கப்பட்ட ரன்கள் 358. ஒரு பேட்ஸ்மேனின் சராசரி ஸ்டிரைக் ரேட் - 70.3. இப்படியான ஆடுகளத்தில் ஒரேயொரு அரை சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் 86.13 என்ற அட்டகாசமான ஸ்டிரைக் ரேட்டிலும் ஆடிய ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

 Rohit Sharma
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை?

இந்தப் போட்டியின் முதல் மூன்று ஓவர்களைப் பார்த்தவர்கள், இது ஏதோ 300+ அடிக்கக்கூடிய ஆடுகளம் என்று தான் நினைத்திருப்பார்கள். ஏனெனில், ஆட்டத்தை அப்படித்தான் அணுகினார் கேப்டன் ரோஹித். தன் அதிரடி பாணியை இந்த ஆடுகளத்திலும் அவர் கடைபிடிக்கவே செய்தார். டேவிட் வில்லி வீசிய முதல் ஓவரில் மெய்டன் ஆடிய அவர், அடுத்த ஓவரில் தன் ஹிட்மேன் மோடுக்கு மாறினார். அந்த ஓவரில் 1 ஃபோரும், 2 சிக்ஸர்களும் பறக்கவிட்டார் அவர். ஒருவேளை கில் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், அவர் இன்னும் கொஞ்ச நேரம் அதே பாணியில் ஆடியிருக்கக்கூடும். ஆனால், அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் தன் பாணியை மாற்றிக்கொண்டார்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்திருந்த ரோஹித், அடுத்த 29 பந்துகளில் ஒரேயொரு பௌண்டரி மட்டுமே அடித்தார். கில், கோலி என அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகள் வெளியேறியதால் தான் களத்தில் நீடித்து இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்தார். நிறைய டாட் பால்கள் ஆடினார். அந்த சூழ்நிலையில் அவர் களத்தில் இருப்பதே முக்கியமானதாக இருந்ததால், ரன்ரேட் பற்றிய சிந்தனை பெருமளவு இருக்கவில்லை. இருந்தாலும் அதை சரிசெய்யும் அளவுக்கு அவ்வப்போது பௌண்டரிகள் வந்தன. வோக்ஸ், வுட், ரஷீத் என பந்துவீசிய அனைவரின் பந்துகளிலும் பௌண்டரிகள் அடித்த ரோஹித், 66 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசி இங்கிலாந்து பௌலர்களை மேலும் மிரட்டினார். விக்கெட் தேவைப்பட்டதால் லியாம் லிவிங்ஸ்டனை கொண்டு வந்தார் ஜாஸ் பட்லர். அவரது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு ஃபோர்கள் அடித்தார் ஹிட்மேன். லிவிங்ஸ்டன், மொயீன் அலி என ஸ்பின்னர்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் முயற்சி ரோஹித் இருந்த வரை பலிக்கவில்லை. இருவரது ஓவர்களிலும் ஃபோர் அடித்தார் ரோஹித். ஆனால் கடைசியில் ஆதில் ரஷீத் பந்தில் பெரிய ஷாட் அடிக்கப்போய் பௌண்டரி எல்லையில் கேட்ச் ஆனார் அவர். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த போட்டியில், ஓப்பனராகக் களமிறங்கி 37 ஓவர்கள் தாக்குப்பிடித்து நின்றார் ரோஹித்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகள் இழந்தது நல்ல விஷயம் இல்லை. முதல் 10 ஓவர்கள் முடிந்த பிறகு, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியமானதாக இருந்தது. நல்ல வேளையாக அது எங்களுக்கு அமைந்தது. இந்த மாதிரியான போட்டிகளில் நீங்கள் உங்கள் ஷாட்களை எப்போதும் போல் ஆடிவிட முடியாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடவேண்டும். அனுபவம் இருக்கும் பட்சத்தில் அதை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். புதிய பந்தை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. அதே சமயம் போட்டி போகப் போக பந்து கொஞ்சம் இலகுவானது. அந்த சமயத்தில் ஸ்டிரைக் ரொடேட் செய்வது எளிதாக இருக்கவில்லை. நாங்கள் 20-30 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறோம் என்றே நினைத்தேன். ஆனால் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்பின்னர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வைத்தனர். ஒரு குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்யும்போது ஒவ்வொரு முறையும் இப்படி நிகழ்ந்திடாது. இப்படியொரு அட்டகாசமான பௌலிங் லைன் அப் இருக்கும்போது, அவர்கள் தங்கள் மேஜிக்கை நிகழ்த்த பேட்ஸ்மேன்கள் சற்று உறுதுணையாக இருக்கவேண்டும்"

ரோஹித் ஷர்மா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com