உடைக்கவே முடியாத World Record படைத்த ரோகித்! IPL மோதலுக்கு பின் கோலி - நவீன் செய்த Great சம்பவம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
Kohli-Naveen-Rohit
Kohli-Naveen-RohitTwitter

“கோலி, ரோகித்தால் என் 100 சதங்களை அடிக்க முடியும்!” - சச்சின்

உலக நாடுகள் பார்த்து வியக்க, 100 சர்வதேச சதங்களை பதிவுசெய்த சச்சின் டெண்டுல்கர் மகுடத்தின் உச்சத்தில் இருந்த சமயம் அது. யாராலும் தொடவே முடியாத இமாலய சாதனையை குவித்திருந்த அந்த ஜாம்பவானிடம், ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக “உங்களுடைய ‘100 சர்வதேச சதங்கள்’ என்ற சாதனையை யாராவது முறியடிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?” என நகைச்சுவையாக கேட்கப்பட்டது.

சச்சின்
சச்சின்

‘எப்படியும் யாராலும் உடைக்க முடியாது என்றுதான் கூறப்போகிறீர்கள் சச்சின் பாய்’ என அங்கிருந்த சிலரே கூற, சிரித்து கொண்டே பதில்கூறிய சச்சின் “உடைக்க முடியும்.. அவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்” என்று கூறினார். நிகழ்ச்சியில் கூடியிருந்த அனைவருக்கும் ஆச்சரியம் தொற்றிக்கொண்டது, யாராலும் முறியடிக்கவே முடியாது என நினைத்த ஒரு இமாலய சாதனையை இவர் முறியடிக்க முடியும் என்கிறார்... அதுவும், அவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்... அட யாருப்பா அது என்று அனைவரும் குழம்ப... கூலாக பேசிய சச்சின், “அந்த சாதனையை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவால் உடைக்க முடியும்” என்றார்! அதை அவர் சொன்ன போது அனைவரும் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

Kohli-Naveen-Rohit
390 ரன்கள் குவித்த இந்தியா! மீண்டும் சதம் விளாசி சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
சச்சின்
சச்சின்

ஆனால் கிரிக்கெட்டை முழுமையாக ஆன்மாவோடு உணர்ந்த ஒருவனின் சொல் எவ்வளவு தூரம்வரை செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாய், கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சச்சினின் நம்பிக்கையை உண்மையாக்கி பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அதற்கு நேற்றைய உலகக்கோப்பை லீக் தொடர் ஒரு சாட்சி!

இந்தியாவிற்கு ஷாக் கொடுத்த ஷாகிதி - அஸ்மதுல்லா!

சாதனை பட்டியல்களை குவிப்பதற்காகவே, நேற்றைய தினம் நடந்த உலகக்கோப்பை லீக் தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே இப்ராகிமை வெளியேற்றி ஜஸ்பிரித் பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து குர்பாஸ் மற்றும் ரஹ்மத் இருவரையும் அடுத்தடுத்து இந்தியா வெளியேற்ற, 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. எப்படியும் இதற்கு மேல் ஆப்கானிஸ்தான் எழுச்சி பெறாது என நினைத்த போதுதான் களத்திற்கு வந்த கேப்டன் ஷாகிதி மற்றும் அஸ்மதுல்லா ஜோடி போட்டியையே தலைகீழாக திருப்பி போட்டனர்.

கடந்த போட்டியில் சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்த குல்தீப் யாதவை, சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த ஜோடி மிரட்சியை ஏற்படுத்தியது. ஒருபுறம் ஷாகிதி பவுண்டரிகளாக விரட்ட, அஸ்மதுல்லாவோ நாலாபுறமும் சிக்சர்களாக பறக்கவிட்டார்.

Kohli-Naveen-Rohit
உலகக்கோப்பையின் மிகப் பெரிய சேஸை அரங்கேற்றிய முகமது ரிஸ்வான்! அனுபவ ஆட்டத்தால் மிளிர்ந்த ஆட்டநாயகன்!
Azmatullah - Shahidi
Azmatullah - Shahidi

ஒரு தரமான எதிர்ப்பாட்டத்தை விளையாடிய இவர்கள் அடுத்தடுத்து அரைசதங்களை பதிவு செய்து அசத்தினர். சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் என யாரையும் விட்டுவைக்காத இந்த ஜோடி, இந்திய அணியை அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. ‘என்னப்பா போறபோக்க பார்த்தா இவங்களே 300 அடிப்பாங்க போலயே’ என இந்திய ரசிகர்கள் புலம்ப, ஒருவழியாக அஸ்மதுல்லாவை 62 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா. ஆனால் தொடர்ந்து தன்னுடைய க்ளாஸி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாகிதி, ஆப்கானிஸ்தானை 200 ரன்களை கடந்து ஒரு பெரிய டோட்டலுக்கு அழைத்து சென்றார்.

bumrah
bumrah

8 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 80 ரன்கள் அடித்து சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஷாகிதி, ஒரு ரிவர்ஸ் ஷாட் ஆடி அவராகவே வெளியேறினார். “இப்போ எதுக்கு அந்த ஷாட் ஆடுனிங்க ஷாகிதி” என ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் புலம்ப, 272 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தியது இந்திய அணி. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரிட் பும்ரா, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

16 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்! சதமடித்த ரோகித் சர்மா!

273 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ”ஏன்பா இஷான் கிஷன், நீ போன மேட்ச்ல பண்ணதே போதும், அமைதியா வேடிக்கை பார்” என மறுமுனையில் நிறுத்திவிட்டு, ஒரு ருத்ரதாண்டவமே ஆடினார் ஹிட்மேன். முதலில் பவுண்டரிகளாக விரட்டிய அவர், பின்னர் சிக்சர்களாக பறக்கவிட இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ரோகித்
ரோகித்

16 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரோகித் சர்மா, தன்னுடைய 31வது ஒடிஐ சதத்தை பதிவுசெய்து அசத்தினார். ரன்வேகத்தை நிறுத்தாத இந்திய அணி 150 ரன்களை கடக்க, ஒருவழியாக 47 ரன்னில் இஷான் கிஷனை வெளியேற்றிய ரசீத்-கான் முதல் விக்கெட்டை எடுத்துவந்தார். கிரவுண்டின் நாலாபுறமும் சிக்சர்களாக தெறிக்கவிட்ட ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்து வெளியேறினார்.

நேருக்கு நேர் மோதிய கோலி-நவீன்!

பின்னர் தன்னுடைய சொந்த மண்ணின் மைதானத்தில் களமிறங்கிய விராட் கோலி, முதல் பந்தையே IPL மோதலில் ஈடுபட்ட நவீன் உல் ஹக்கிற்கு எதிராக சந்தித்தார். ஒரு பெரிய ரைவல்ரியை வைத்திருக்கும் இந்த இரண்டு வீரர்கள் களத்தில் சந்தித்ததும், மைதானத்தில் கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ”கோலி, கோலி, கோலி” என கத்த ஆரம்பித்தனர். ஆனால் களத்தில் நடந்தது என்னவோ வேறாக இருந்தது. ஓவர் முடிந்ததும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்ட கோலி மற்றும் நவீன் இருவரும் கைகளை கொடுத்து HUG செய்துகொண்டனர்.

கோலி-நவீன்
கோலி-நவீன்ஐபிஎல்

கடந்த பல மாதங்களாக சமூக வலைதளங்களில் ஓயாமல் இருந்த கருத்துமோதல்கள், நவீன் மீதான கோலி ரசிகர்களின் விமர்சனங்கள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த இந்த சம்பவம், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கோலி-நவீன்
கோலி-நவீன்

6 பவுண்டரிகளை விரட்டி அரைசதம் அடித்த விராட் கோலி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

35 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

பல உலக சாதனைகளை படைத்த ரோகித்!

இந்த போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, பல உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

1) சிக்சருக்கு பேர் போனவரான ஹிட்மேன் இந்த போட்டியில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக மாறி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு 553 சிக்சர்களுடன் இருந்த க்றிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி 556 சிக்சர்களுடன் இந்த இமாலய சாதனையை படைத்துள்ளார் ரோகித்.

2) ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 7வது சதத்தை பதிவு செய்த ரோகித் சர்மா, இதற்கு முன் 6 சதங்கள் அடித்து முதல் வீரராக இருந்த சச்சினை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்தார்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

3) 19 உலகக்கோப்பை இன்னிங்ஸ்களில் விளையாடிருக்கும் ஷர்மா, அதிவேகமாக ஆயிரம் உலகக்கோப்பை ரன்களை கடந்த வீரராக மாறி உலகசாதனையை சமன்செய்துள்ளார். வார்னர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் 19 இன்னிங்ஸ்களில் இதை செய்துள்ளனர்.

4) 31வது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவு செய்த ரோகித், 30 சதங்களுடன் முன்னிலையில் இருந்த ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதன் மூலம் அதிக ஒடிஐ சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கோலி மற்றும் ரோகித் என முதல் 3 இடங்களை பிடித்து இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

ரோகித் - கோலி
ரோகித் - கோலி

5) 28 உலகக்கோப்பை சிக்சர்களை பதிவுசெய்திருக்கும் ரோகித் சர்மா, உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். அடுத்த பெரிய போட்டியில் வரும் சனிக்கிழமை பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com