உலகக்கோப்பையின் மிகப் பெரிய சேஸை அரங்கேற்றிய முகமது ரிஸ்வான்! அனுபவ ஆட்டத்தால் மிளிர்ந்த ஆட்டநாயகன்!

2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றிய தொடர் இது!
முகமது ரிஸ்வான்
முகமது ரிஸ்வான்pt web

போட்டி 8: இலங்கை vs பாகிஸ்தான்

முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (இலங்கை - 344/9; பாகிஸ்தான் - 345/4, 48.2 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)

பேட்டிங்: 121 பந்துகளில் 131 ரன்கள் (8 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள்)

ஃபீல்டிங்: 3 கேட்ச்கள்

இந்தப் போட்டியில் முகமது ரிஸ்வான் களமிறங்கியபோதும் முதல் போட்டியைப் போன்ற ஒரு சூழ்நிலையில் தான் களம் கண்டார். சொல்லப்போனால் இன்னும் இக்கட்டான நிலையில் களமிறங்கினார் அவர். எட்டாவது ஓவரில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது விக்கெட்டாக கேப்டன் பாபர் ஆசமை இழந்தது பாகிஸ்தான். 345 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த அந்த அணி மீண்டும் முகமது ரிஸ்வானையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அந்தத் தேசத்தின் நம்பிக்கையை இம்முறையும் தூக்கிச் சுமந்தார் ரிஸ்வான்.

ஃபகர் ஜமானுக்குப் பதில் இந்தப் போட்டியில் ஓப்பனராகக் களமிறங்கிய அப்துல்லா ஷஃபீக் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் விளையாட அவருக்கு நன்றாக கம்பெனி கொடுத்தார் ரிஸ்வான். ஷஃபீக் ஓரளவு செட்டில் ஆனதால், அவருக்கு உறுதுணையாக ஆடினார். பந்துகளை அதிகம் வீணடிக்காமல் ஷஃபீகுக்கு ஸ்டிரைக் ரொடேட் செய்துகொண்டே இருந்தார். தன் 20வது பந்தில் தான் முதல் ஃபோரை அடித்தார் அவர். அடுத்த ஃபோர் அடிக்க இன்னொரு 10 பந்துகள் எடுத்துக்கொண்டார். மூன்றாவது ஃபோரோ இன்னும் 14 பந்துகள் கழித்து தான் வந்தது. 44 பந்துகளில் 3 ஃபோர்கள் தான் என்றாலும், தொடர்ந்து ஓடி ஓடி ரன் சேர்த்ததால், 82 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் அவர்.

அவரும் ஷஃபீக்கும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு விளையாடினார்கள். கிட்டத்தட்ட 350 ரன்களை சேஸ் செய்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, பரபரப்பு காட்டவில்லை. ஓவருக்கு ஒரு பௌண்டரி என்று கூட திட்டமிட்டு ஆடவில்லை. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் முக்கியம் என்பதை உணர்ந்து அதைச் செய்தனர். ரிஸ்வானின் அனுபவம் ஷஃபீக்குக்கு பெருமளவு உதவியது. பதிரானா வீசிய 29வது ஓவரில் ஃபோர் அடித்து அரைசதம் கடந்தார் ரிஸ்வான். 58 பந்துகளில் இதை நிறைவு செய்த அவர், கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 4 அரைசதங்கள் எடுத்திருக்கிறார்.

30 ஓவர்கள் கடந்த பிறகு தங்கள் ஆட்டத்தை இருவரும் மாற்றினார்கள். தேவைப்பட்ட ரன்ரேட் எட்டுக்கும் மேல் இருக்க, அதிக பௌண்டரிகள் அடிக்க முடிவு செய்தார் சில ரிஸ்க்கான ஷாட்களும் ஆடினார்கள். ஷஃபீக் சதமடித்துவிட்டு அவுட் ஆனாலும், ரிஸ்வான் எளிதாக விட்டுவிடவில்லை. அதன்பிறகு ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார். ஓவருக்கு ஒரு பௌண்டரி அடிக்கத் தொடங்கினார். அதிக ரன்களை ஓடியே எடுத்தவர், தொடர்ந்து தசைப்பிடிப்பால் அவதிப்படத் தொடங்கினார். இருந்தாலும் அவர் அசரவில்லை. 30வது ஓவர் முடிவில் கிட்டத்தட்ட 8.2 என்றிருந்த தேவைப்படும் ரன்ரேட் ஏழே ஓவர்களில் 7.2 என்றானது. அவ்வளவு சிறப்பாக விளையாடிய ரிஸ்வான், 97 பந்துகளில் சதம் கடந்தார். கடைசி வரை களத்தில் நின்று பாகிஸ்தான் அணியின் வெற்றியையும் உறுதி செய்தார் அவர். உலகக் கோப்பை அரங்கில் இதுதான் மிகப் பெரிய ரன் சேஸாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார் ரிஸ்வான்.

2023 உலகக் கோப்பையின் டாப் ரன் ஸ்கோரர்கள்

1. முகமது ரிஸ்வான் - பாகிஸ்தான் - 199 ரன்கள்

2. குசல் மெண்டிஸ் - இலங்கை - 198 ரன்கள்

3. டெவன் கான்வே - நியூசிலாந்து - 184 ரன்கள்

4. ரச்சின் ரவீந்திரா - நியூசிலாந்து - 174 ரன்கள்

5. ஜோ ரூட் - இங்கிலாந்து - 159 ரன்கள்

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"உங்கள் நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவது எப்போதுமே பெருமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம். எனக்கு இந்தத் தருணத்தில் வார்த்தைகளே வரவில்லை. இந்த சேஸ் மிகவும் கடினமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு நாங்கள் அனைவருமே நிச்சயம் சேஸ் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் துருதிருஷ்டவசமாக பாபர் ஆசம் விக்கெட்டை விரைவில் இழந்துவிட்டோம். இருந்தாலும் அதன்பிறகு நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைந்துவிட்டது. இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. எங்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. ஷஃபீக்கிடம் இந்த சேஸை ஒவ்வொரு படியாக எடுத்துக்கொள்வோம் என்று கூறினேன்" எனக் கூறினார் பாபர் ஆசம். அவர் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டது பற்றி கேட்டதற்கு, "சில நேரங்களில் தசைப் பிடிப்பு இருந்தது. சில நேரங்களில் நன்றாக இருந்தேன்" என்று கூறி சிரித்தார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com